இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!

May 9, 2024, 10:45 AM IST

வாணியம்பாடி அருகே முகப்பு விளக்கு எரியாமல் இரவு நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

தமிழகம் முழுவதும் விரைவு பேருந்துகள், தொலைதூர பேருந்துகள், நகர பேருந்துகள் என அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளில் பல பேருந்துகள் அதன் பயன்பாடு காலத்தையும் கடந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

கடந்த சில நாள்களுக்கு முன் அரசு பேருந்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நடத்துநர் ஒருவர் பேருந்து இருக்கையுடன் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து பல்வேறு சம்பவங்கள் நடந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கும் படி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், வாணியம்பாடி அருகே முகப்பு விளக்கு எரியாமல் இரவு நேரத்தில் அரசுப் பேருந்து  பயணிகளுடன் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளைகுட்டை பகுதியில் இருந்து நிம்மியம்பட்டு வழியாக திருப்பத்தூர் வரை அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல வெள்ளைகுட்டை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் சமயத்தில் பேருந்தில் உள்ள முகப்பு விளக்கு இரண்டும் எரியாத நிலையில் ஜோலார்பேட்டையை கடந்து திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் சமயத்தில் இதை பார்த்த ஒருவர் பேருந்தை பின் தொடர்ந்து பேருந்து முகப்பு விளக்கு எரியாமல் பயணிகளை ஏற்றி செல்லும் காட்சியை வீடியோவாக பதிவு செயது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அரசு பேருந்தில் முகப்பு விளக்குகள் இரண்டும் இல்லாமல் பயணிகளை ஏற்றி கொண்டு சுமார் 25 கிலோமீட்டர் தூரம் செல்லும் அவல நிலையை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.