ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா விதிக்கும் வரிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆதரவு தெரிவித்துள்ளார். தியான்ஜின் உச்சிமாநாட்டில் மோடி, புதின் மற்றும் ஜின்பிங் சந்திப்புக்குப் பின் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பது சரியான யோசனை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா இடையேயான உறவுகள் குறித்த அமெரிக்காவின் கவலையைப் பிரதிபலிக்கும் வகையில் ஜெலன்ஸ்கியின் கருத்து அமைந்துள்ளது.

டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் மீது வர்த்தக வரி விதித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தினார். சமீபத்தில், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்கவும் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாடு

சமீபத்தில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவிற்குச் சென்ற மோடி, புதின் மற்றும் ஜின்பிங் ஆகியோருடன் உற்சாகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்தச் சந்திப்பு குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்த அதிபர் டிரம்ப், "இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம்" என்று ஆதங்கத்துடன் பதிவிட்டார்.

ஜெலன்ஸ்கியின் கருத்து

தியான்ஜின் உச்சிமாநாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த மோடி, ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று வலியுறுத்தினார்.

இந்தச் சூழலில், ஓர் அமெரிக்க ஊடகத்திற்குப் பேட்டியளித்த ஜெலன்ஸ்கியிடம், "மோடி, புதின் மற்றும் ஜின்பிங் இடையேயான சந்திப்பால் அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை தோல்வியடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?" என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ஜெலன்ஸ்கி, "அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். ரஷ்யாவுடன் தொடர்ந்து ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீது வரிகளை விதிப்பது ஒரு நல்ல யோசனை என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். அவரது இந்தக் கருத்து, அமெரிக்கா இந்தியா மீது அதிக வரி விதிப்பதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது.