போர் நிறுத்தம் மோடி கையில்! ஆதரவு தேடி இந்தியா வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார். இந்தியா பயணத்திற்கான தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தூதர் கூறினார்.

இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்திற்கான தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக், "அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறோம். இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் ஒரு பெரிய சாதனையாக இருக்கும். பயணத்திற்கான தேதியை இறுதி செய்யும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
ஜெலன்ஸ்கியை இந்தியாவுக்கு அழைத்த மோடி
மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக உக்ரைனுக்கு வருகை தந்து, அதிபர் ஜெலன்ஸ்கியை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனின் தேசிய கொடி தினத்தை முன்னிட்டு பேசிய அவர், 2023 முதல் இந்தியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அதிகரித்துள்ளதை வரவேற்றார். உக்ரைன் - ரஷ்யா போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உறுதியுடன் ஆதரவு அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி பேசியதை அவர் பாராட்டினார்.
ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு நீண்டகால உறவுகள் இருப்பதால், அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று உக்ரைன் கருதுவதாகவும் உக்ரைன் தூதர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வரவிருக்கும் அமர்விலும் இந்தியாவின் ஆதரவு தொடரும் என உக்ரைன் தரப்பு நம்புவதாகவும் அவர் கூறினார்.
மோடியுடன் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
முன்னதாக, ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது, போருக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
"இந்த விஷயத்தில் அனைத்து பங்களிப்புகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. அத்துடன், உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா உறுதியாக உள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.