ஜனாதிபதி டிரம்ப் தான் சொல்வதைச் செய்கிறார் என்பதை மதுரோ சமீபத்தில் அறிந்தவர். மதுரோ அமெரிக்காவில் போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

வெனிசுலா மீதான அமெரிக்காவின் படையெடுப்பு, அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததை அடுத்து இதன் பின்னணியில் உள்ள தனது எதிர்கால நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளார் டொனால்ட் டிரம்ப். இன்று, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்தது வெற்றிகரமாக இருந்ததாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மதுரோவும் அவரது மனைவியும் போர்க்கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்படுகிறார்கள். அவர்கள் நியூயார்க்கில் விசாரிக்கப்பட உள்ளனர்.

வெனிசுலாவில் மதுரோவின் விசுவாசிகளுக்கு இனி இடமில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார். மதுரோவை ஆதரிப்பவர்களை அமெரிக்கா மீண்டும் தாக்கும். வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா தலையிடுவது மட்டுமல்லாமல், வலுவாக ஈடுபடும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், ‘‘வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா தலையிடும். வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்க எரிசக்தி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும். உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் எங்களிடம் உள்ளன. இதில் நாங்கள் மிகவும் ஈடுபடுவோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நீண்ட காலமாக அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல், குற்றங்களில் ஈடுபட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். சமீபத்தில், அமெரிக்கா பல முறை வெனிசுலா டேங்கர்களை குறிவைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா இன்று வெனிசுலா மீது படையெடுத்து அதிபர் மதுரோவை கைது செய்தனர்.

டிரம்ப் நிர்வாகம் பலமுறை மதுரோவை எச்சரித்ததாக கூறியுள்ள அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ், "போதைப்பொருள் கடத்தலை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தி உள்ளோம். எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. போதைப்பொருள் கடத்தல் நிறுத்தப்பட வேண்டும். திருடப்பட்ட எண்ணெய் அமெரிக்காவிற்குத் திருப்பித் தரப்பட வேண்டும். இதை அடைய நாங்கள் வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

ஜனாதிபதி டிரம்ப் தான் சொல்வதைச் செய்கிறார் என்பதை மதுரோ சமீபத்தில் அறிந்தவர். மதுரோ அமெரிக்காவில் போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலுக்கான நீதியிலிருந்து யாரும் தப்ப முடியாது" எனத் தெரிவித்தார்.