மாலியில் உள்ள கெயஸ் பிராந்தியத்தில் ஒரு தொழிற்சாலையில் இருந்து மூன்று இந்தியத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்களை மீட்க மாலி அரசாங்கத்திடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மூன்று இந்தியத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அவர்கள் கெயஸ் பிராந்தியத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். கடத்தப்பட்டவர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாலி அதிகாரிகளை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்திய அரசுக்குக் கிடைத்த தகவலின்படி, ஜூலை 1 அன்று மேற்கு மற்றும் மத்திய மாலியின் பல இடங்களில் உள்ள பல ராணுவ மற்றும் அரசு நிறுவங்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டன என்று வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கெயஸ் பகுதியில் உள்ள டைமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில்தான் இந்த ஆயுதமேந்திய தாக்குதல் நடந்தது.

இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ள வெளியுறவு அமைச்சகம், மாலியில் உள்ள இந்திய தூதரகம் உள்ளூர் அதிகாரிகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கடத்தப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகம் கண்டனம்:

வெளியுறவு அமைச்சகம் இந்தக் கடத்தலைக் கண்டித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மீதான வன்முறைக்கு எதிராக இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. "பாமாகோவில் உள்ள இந்திய தூதரகம், மாலி அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உள்ளூர் சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் டைமண்ட் சிமென்ட் தொழிற்சாலையின் நிர்வாகத்துடன் நெருக்கமான மற்றும் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறோம்" என்று வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.

"இந்த கண்டிக்கத்தக்க வன்முறைச் செயலை இந்திய அரசு சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. கடத்தப்பட்ட இந்தியர்களைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாலி குடியரசு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. இந்திய நாட்டினரை பாதுகாப்பாகவும் விரைவில் விடுவிப்பதற்கும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்." என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

கெயஸில் உள்ள டைமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட தாக்குதல், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் (JNIM) குழுவால் நடத்தப்பட்டது என்று பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் செனகலுடனான மாலியின் எல்லைக்கு அருகிலுள்ள டிபோலி, அத்துடன் அருகிலுள்ள கெயஸ் மற்றும் சாண்டேர் நகரங்களை இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். பாமாகோவுக்கு வடமேற்கில் மவுரிட்டானியாவின் எல்லைக்கு அருகிலுள்ள நியோரோ டு சஹெல் மற்றும் கோகோய் ஆகிய இடங்களிலும், மத்திய மாலியில் உள்ள மொலோடோ மற்றும் நியோனோ ஆகிய இடங்களிலும் பிற தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்று ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டி மாலியின் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.