நியூயார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் கைவிலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வருகைக்கான காரணத்தை விளக்க முடியாததால் இந்த மாணவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் நியூஆர்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் கைவிலங்கிடப்பட்டு தரையில் தள்ளப்பட்டு, பின்னர் நாடு கடத்தப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய-அமெரிக்க தொழிலதிபர் குணால் ஜெயின் இந்த காட்சிகளைப் பகிர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் நடத்தப்படும் விதம் குறித்த விவாதத்தையும், பெரும் கொந்தளிப்பையும் இது ஏற்படுத்தியுள்ளது.
குணால் ஜெயின் அளித்த தகவலின்படி, பாதிகப்பட்டுள்ள மாணவர் ஹரியானாவைச் சேர்ந்தவர் எனச் நம்பப்படுகிறது. அவர் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளிடம் தனது வருகைக்கான காரணத்தை விளக்க முடியாமல் போனதால் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு முறையான விசா இருந்தபோதிலும், மாணவர் தடுத்து நிறுத்தப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, அதே நாள் மாலையே நாடு கடத்தப்பட்டுள்ளார்.
குணால் ஜெயின் கோரிக்கை
"ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட்ட" இந்த மாணவரின் நிலை குறித்து அவரது பெற்றோருக்குத் தெரியாது என ஜெயின் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை டேக் செய்து, மாணவருக்கு உதவி கோரியுள்ளார்.
"நேற்று இரவு நியூயார்க் விமான நிலையத்தில் ஒரு இளம் இந்திய மாணவர் நாடு கடத்தப்படுவதை நான் கண்டேன். அவர் கைவிலங்கிடப்பட்டு, அழுதுகொண்டிருந்தார், ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட்டார். அவர் கனவுகளைத் தாங்கி இங்கே வந்தவர், எந்தத் தீங்கையும் செய்யவில்லை. நானும் ஒரு NRI (வெளிநாடுவாழ் இந்தியர்) என்ற முறையில், அவருக்கு உதவி செய்ய இயலாத நிலையில், மனமுடைந்தவனாக உணர்ந்தேன். இது ஒரு துயரம்," என்று அவர் கூறினார்.
மேலும், "இந்த ஏழை மாணவர்களின் பெற்றோருக்கு இங்கே என்ன நடக்கிறது என்று தெரியாது. அவர் நேற்று இரவு என்னுடன் அதே விமானத்தில் ஏற வேண்டியவர், ஆனால் அவர் ஏறவே இல்லை. அவருக்கு என்ன ஆனது என்பதை யாராவது நியூ ஜெர்சி அதிகாரிகளிடம் கேட்டறிய வேண்டும். நான் அவரை குழப்பமடைந்த நிலையில் கண்டேன்," என்று அவர் தெரிவித்தார்.
மாணவரின் கூக்கூரல்
"நான் பைத்தியம் இல்லை... நான் பைத்தியம் என்று நிரூபிக்க அவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள்," என்று அந்த இளைஞன் கத்தியதாக ஜெயின் கூறினார்.
"இந்த மாணவர்கள் தங்கள் விசாவைப் பெற்று காலையில் விமானத்தில் ஏறுகிறார்கள். சில காரணங்களால், அவர்கள் தங்கள் வருகைக்கான காரணத்தை குடியேற்ற அதிகாரிகளிடம் விளக்க முடியாமல், குற்றவாளிகளைப் போல கட்டிப் போடப்பட்டு மாலை விமானத்தில் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். தினமும் இதுபோல 3-4 வழக்குகள் நடக்கின்றன. கடந்த சில நாட்களில் இதுபோன்ற வழக்குகள் அதிகமாக நடந்துள்ளன," என்று ஜெயின் கவலை தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர்களின நிலை
மாணவர்கள் தங்கள் வருகைக்கு திருப்திகரமான விளக்கங்களை வழங்கத் தவறியதால் நாடு கடத்தப்படுகிறார்கள். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், ஜனவரி மாதத்திலிருந்து 1,080 இந்திய நாட்டவர்களை நாடு கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமை அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் சிறிய தவறுகளுக்காகவும் தெளிவற்ற காரணங்களுக்காகவும் அதிக அளவில் நாடு கடத்தப்படுகிறார்கள். அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கம் (AILA) விசா ரத்துகள் மற்றும் SEVIS பதிவு முடிவுகளின் அதிகரிப்பு பற்றி தெரிவித்துள்ளது. இவற்றில் கிட்டத்தட்ட 50% வழக்குகள் இந்திய மாணவர்கள் தொடர்பானவை என அவர்கள் கூறுகின்றனர்.