கனடா பிரதமர் மார்க் கார்னி தனது அமைச்சரவையை மாற்றியமைத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்தை வெளியுறவு அமைச்சராக நியமித்துள்ளார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி தனது அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். பிரதமர் கார்னியின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டு பிரமாணம் எடுத்துக் கொண்டார். முன்னதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களில் 58 வயதான அனிதா ஆனந்த் பணியாற்றியுள்ளார். 

அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்பு

கனடா லிபரல் கட்சியின் மூத்த உறுப்பினரான அனிதா ஆனந்த், பகவத் கீதையின் மீது கை வைத்து பிரமாணம் எடுத்துக் கொண்டார். முந்தைய அமைச்சரவையிலும் பகவத் கீதையின் மீது பிரமாணம் எடுத்துக் கொண்டார். பிரதமர் மார்க் கார்னி 28 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். அனைத்து அமைச்சர்களும் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 

கார்னி அரசாங்கத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். இது அமைச்சரவையின் திறன் மற்றும் பன்முகத்தன்மையை சமநிலைப்படுத்தும் என்று பிரதமர் கார்னி கூறியுள்ளார். கனடா-அமெரிக்க உறவுகளில் பதற்றம் நிலவும் நிலையில், "கனடியர்கள் விரும்பும் மற்றும் தேவைப்படும் மாற்றத்தை வழங்க" இந்த அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கார்னி கூறியுள்ளார்.

பிரமாணம் எடுத்துக் கொள்ளும் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அனிதா ஆனந்த், கனடாவின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதில் பெருமைப்படுவதாகவும், பாதுகாப்பான, நியாயமான உலகத்தை உருவாக்கவும், கனடியர்களுக்கு சேவை செய்யவும் பிரதமர் மார்க் கார்னி மற்றும் அவரது குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

யார் இந்த அனிதா ஆனந்த்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், கனடாவைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் லிபரல் கட்சியின் மூத்த உறுப்பினர். முன்னதாக போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தகம், பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளார். தற்போது கனடாவின் வெளியுறவு அமைச்சராக பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார். கல்வி டொராண்டோவின் புறநகர்ப் பகுதியான ஓக்வில்லை பிரதிநிதித்துவப்படுத்தும் அனிதா, 2019 இல் அரசியலில் நுழைந்ததிலிருந்து கட்சியின் முக்கிய நபராக அறியப்படுகிறார். 

குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம், டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப் பட்டம் பெற்றுள்ளார். அனிதா ஆனந்த் யேல், குயின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் கல்விப் பதவிகளை வகித்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

குடும்பப் பின்னணி அனிதா ஆனந்த் நோவா ஸ்கோடியாவின் கென்ட்வில்லில் பிறந்தார். அனிதாவின் தாய் சரோஜ் டி. ராம் மற்றும் தந்தை எஸ்.வி. (ஆண்டி) ஆனந்த் இருவரும் இந்திய மருத்துவர்கள். கீதா மற்றும் சோனியா ஆனந்த் என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். அரசியல் வாழ்க்கை அனிதா ஆனந்த் தனது வாழ்நாள் முழுவதும் பொது சேவையில் ஈடுபட்டுள்ளார் மற்றும் அமைச்சர் பதவி உட்பட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் தடுப்பூசிகளை வாங்கியதற்காக பாராட்டுகளைப் பெற்றார். 

2021 இல், அவர் கனடாவின் பாதுகாப்பு அமைச்சரானார். ரஷ்யா-உக்ரைன் போரின்போது உக்ரைனுக்கு உதவி வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தார். கனடா ஆயுதப்படைகளில் பணியாளர் பற்றாக்குறையை சமாளித்தார். டிசம்பரில், அனிதா ஆனந்த் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் சமூகத் தலைவரான ஜார்ஜ் சாஹல், பிரதமர் பதவிக்கு வலுவான போட்டியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.