ஜப்பானிய நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அவர்களுக்குப் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை. இதுகுறித்து பிரதமர் சனாயே தகாய்ச்சி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.

ஜப்பானிய நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப போதிய கழிப்பறை வசதிகள் இல்லை எனக் கூறி அந்நாட்டுப் பிரதமர் சனாயே தகாய்ச்சி உள்ளிட்ட சுமார் 60 பெண் எம்.பி.க்கள் அதிகாரபூர்வமாக மனு அளித்துள்ளனர்.

ஜப்பான் அரசியலில் கடந்த அக்டோபர் மாதம் சனாயே தகாய்ச்சி நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்று வரலாறு படைத்தார். இருப்பினும், ஜப்பானிய அரசியல் இன்றும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் களமாகவே உள்ளது. இதன் வெளிப்பாடாகவே நாடாளுமன்றக் கட்டிடத்தில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் கூட குறைவாக இருப்பதாகப் பெண் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நீண்ட வரிசையில் நிற்கும் எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் முக்கிய கூட்ட அரங்குக்கு அருகில், 73 பெண் உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கு இரண்டே இரண்டு அறைகள் (Cubicles) கொண்ட ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது.

"முக்கிய அமர்வுகள் தொடங்குவதற்கு முன்னால், பெண் எம்.பி.க்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது" என்று எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் யசூகோ கோமியாமா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

1936-இல் கட்டப்பட்ட ஜப்பானிய நாடாளுமன்றம் (The Diet), பெண்கள் வாக்குரிமை பெறுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, ஆண்களுக்கு 67 கழிப்பறைகள் உள்ளன. பெண்களுக்கு 22 கழிப்பறைகள் மட்டுமே.

பாலின சமத்துவத்தில் பின்தங்கும் ஜப்பான்

உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) பாலின இடைவெளி அறிக்கையில், ஜப்பான் 148 நாடுகளில் 118-ஆவது இடத்தையே பிடித்துள்ளது. 465 இடங்களைக் கொண்ட கீழ்சபையில் தற்போது பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 45-லிருந்து 72-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இது மொத்த எண்ணிக்கையில் மிகச் சிறிய அளவே ஆகும்.

"கூடுதல் கழிப்பறைகளைக் கேட்பது, ஒருவகையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் அடையாளம் என்றாலும், ஜப்பானில் பாலின சமத்துவம் முழுமையாக அடையப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது" என்று பெண் எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது.