கழிப்பறை வசதி: 20 உயர் நீதிமன்றங்கள் மீது உச்ச நீதிமன்றம் கடும் பாய்ச்சல்!
நாட்டின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் கழிப்பறை வசதிகளை உறுதி செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, 20 உயர் நீதிமன்றங்கள் அறிக்கைகளைத் தாக்கல் செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் கழிப்பறை வசதிகள்
நாட்டின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் கழிப்பறை வசதிகளை உறுதி செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, 20 உயர் நீதிமன்றங்கள் அறிக்கைகளைத் தாக்கல் செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தனது கவலையை வெளிப்படுத்தியது. இந்த அறிக்கைகளைத் தாக்கல் செய்ய எட்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுவே கடைசி வாய்ப்பு என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. அடுத்த எட்டு வாரங்களுக்குள் அறிக்கைகளைத் தாக்கல் செய்யத் தவறினால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் குறிப்பிட்டனர்.
கழிப்பறை - அடிப்படை உரிமை
முன்னதாக, ஜனவரி 15 அன்று, அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ், முறையான சுகாதார வசதிகள் கிடைப்பது ஓர் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அனைத்து நீதிமன்ற வளாகங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனித்தனி கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதி செய்யுமாறு உயர் நீதிமன்றங்கள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது. மேலும், நான்கு மாதங்களுக்குள் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் கோரியிருந்தது.
இன்று (புதன்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், கல்கத்தா, டெல்லி மற்றும் பாட்னா உயர் நீதிமன்றங்கள் மட்டுமே, தீர்ப்பின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளன. நாட்டில் மொத்தம் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி வாய்ப்பு
"பல உயர் நீதிமன்றங்கள் இன்னும் தங்கள் அறிக்கைகளைத் தாக்கல் செய்யவில்லை. எட்டு வாரங்களுக்குள் அறிக்கைகளைத் தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம். இந்த அறிக்கையைத் தாக்கல் செய்யத் தவறினால், உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரல்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்," என்று அமர்வு உத்தரவிட்டது.
தனது ஜனவரி 15 தீர்ப்பில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு இந்த வசதிகள் தெளிவாக அடையாளம் காணக்கூடியதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க் வேண்டும் என்றும் இதனை உயர் நீதிமன்றங்கள் மேற்பார்வையிட்டு உறுதிசெய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
குழு அமைக்க வேண்டும்
"மேற்கண்ட நோக்கத்திற்காக, ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நீதிபதியின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழுவில் உயர் நீதிமன்றத்தின் பதிவாளர், தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் மாநிலத்தின் நிதித்துறை செயலாளர், வழக்கறிஞர் சங்கத்தின் ஒரு பிரதிநிதி மற்றும் பொருத்தமான பிற அதிகாரிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்..." என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.
புள்ளிவிவரங்கள் தேவை
இந்தக் குழு ஒரு விரிவான திட்டத்தை வகுக்குமாறும், தினமும் சராசரியாக எத்தனை பேர் நீதிமன்றங்களுக்கு வருகிறார்கள் என்பதற்கான புள்ளிவிவரங்களைத் தொகுக்குமாறும், போதுமான அளவுக்கு தனித்தனி கழிவறைகள் கட்டப்பட்டு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுநல வழக்கின் தீர்ப்பு
“மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தவும் அவற்றைப் தூய்மையாகப் பராமரிக்கவும் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். இது உயர் நீதிமன்றங்களால் அமைக்கப்பட்ட குழுவுடன் கலந்தாலோசித்து அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நான்கு மாத காலத்திற்குள் இதுபற்றி ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.
வழக்கறிஞர் ராஜீப் கலிதா தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.