இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில், ஈரான் அதை மறுத்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்றும், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய மக்களையும் அவர்களுடைய வரலாற்றையும் பற்றி அறிந்தவர்களுக்கு ஈரான் ஒருபோதும் சரண் அடையாது என்பது தெரியும் என அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி கூறியுள்ளார்.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ம் தேதி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இது ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் என இஸ்ரேல் தரப்பு தெரிவித்தது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் களமிறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. எனினும், இதனால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ஈரான் கூறியது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரான் உச்சத் தலைவர் காமேனி, "இதற்கு முன் பார்த்திராத பேரழிவை அமெரிக்கா சந்திக்கும்" என எச்சரிக்கை விடுத்தார். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை வெளியிட்டன. சில நாடுகள் நடுநிலை வகித்தன.
போர் நிறுத்தத்துக்கு ஈரான் மறுப்பு:
இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே "முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது" என அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரான் முதலில் மறுத்தது.
“போர் நிறுத்தம் பற்றியோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை” என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். சிறிது நேரத்திலேயே, இதற்கு மாறான கருத்தையும் அராக்சி கூறினார்.
“இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக எங்கள் சக்திவாய்ந்த ஆயுதப் படைகளின் ராணுவ நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை, அதாவது அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன.” என்றும் "எதிரியின் எந்த தாக்குதலுக்கும் கடைசி நிமிடம் வரை பதிலளித்தோம்" என்றும் அராக்சி மற்றொரு எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
ஈரான் அடிபணியாது:
இதற்கிடையில், ஈரானிய மக்களையும் அவர்களுடைய வரலாற்றையும் பற்றி அறிந்தவர்களுக்கு, ஈரான் நாடு ஒருபோதும் சரண் அடையாது என்பது தெரியும் என காமேனி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்திய பின்னரே, காமேனியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் போர்நிறுத்தம் செய்ய முன்வந்துள்ளன என ட்ரம்ப் கூறியுள்ள சூழலில், அதற்கு முன்பே ஈரான் தலைவரின் இந்த அறிவிப்பு வெளிவந்து இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஈரானிய அமைச்சர் அராக்சியும் போர்நிறுத்தம் பற்றிய ட்ரம்பின் அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
கத்தாரை தொடர்ந்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள பகுதியிலும் மர்ம டிரோன்கள் தாக்கியுள்ளன. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.
