காசா மீதான போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவும் ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள ஒரு வருட காலத்திற்கும் மேலான போர் தொடரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றங்கள் உச்சம் அடைந்துள்ளன. ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இந்த சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
கடந்த அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புப் பகுதிகளை இலக்காகக் கொண்டு 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்ததால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
'ஆபரேஷன் ரைசிங் லயன்'
பதற்றம் தணிந்திருந்த நிலையில், திடீரென 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரான் மீது கடந்த ஜூன் 13 அன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுதப் பயன்பாட்டைத் தடுப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என இஸ்ரேல் தெரிவித்தது. இதற்கு ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் மீண்டும் அதிகரித்தது.
இந்த பதட்டமான சூழலில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் நேரடியாகக் களமிறங்கியுள்ளது. ஈரானின் முக்கிய அணு உலைகளான பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவுக்குப் பேரழிவு நிச்சயம்!
அமெரிக்காவின் இந்த அணு உலை தாக்குதலால் ஈரான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. "அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது. அமெரிக்கா தொடங்கிய இந்தப் போரை நாங்கள் முடித்து வைப்போம்" என ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது குறித்து ஈரான் தலைவர் காமேனியின் பிரதிநிதி, "பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குவோம். தாமதமின்றி உடனே தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம்" என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், "அதனை விட அதிக பலத்துடன் நாங்கள் தாக்குவோம்" என அதிபர் டிரம்ப்பும் எச்சரித்துள்ளது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
அமெரிக்கத் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு:
ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் தூதரகப் பகுதிகளுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள தூதரகங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அனைத்து வகையிலும் துணை நிற்போம் என இஸ்ரேல் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. இதுவரை ஈரான் நடத்திய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 470 டிரோன்களை தாக்கி அழித்துவிட்டோம் என இஸ்ரேல் கூறியுள்ளது. இதன் மூலம், அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல், ஈரானை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளது தெளிவாகிறது.
