ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்கியதாக டிரம்ப் தெரிவித்தார். ஈரான் அமைதிக்குத் திரும்பாவிட்டால் மேலும் தாக்குதல்கள் தொடரும் என்றும் எச்சரித்தார். இந்தத் தாக்குதல்கள் தங்கள் அணுசக்தி திட்டங்களைப் பாதிக்காது என்று ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களை அமெரிக்கா தாக்கியுள்ள நிலையில், இனி ஈரான் அமைதிக்குத் திரும்பாவிட்டால் பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த எட்டு நாட்களில் ஈரானின் முக்கியமான மூன்று அணுசக்தி தளங்களை அமெரிக்கா அழித்துவிட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் அமைதியை நாட வேண்டும் என்றும், இல்லையெனில் துல்லியமான தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலுடன் ஒத்துழைப்பு:
ஈரான் மீதான தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நெருக்கமாகப் பணியாற்றியதாகவும், இது முன்னெப்போதும் இல்லாத ஒத்துழைப்பு என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். இத்தகைய தாக்குதலை அமெரிக்க ராணுவத்தால் மட்டுமே நடத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈரான் ஒரு அச்சுறுத்தல்:
ஈரான் மத்திய கிழக்கு பிராயந்தியத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது என்று குறிப்பிட்ட டிரம்ப், அமைதியை நாடாவிட்டால் மேலும் கடுமையான தாக்குதல்கள் இருக்கும் என்று எச்சரித்தார்.
"40 ஆண்டுகளாக, ஈரான் 'அமெரிக்கா ஒழியட்டும்’ என்றும் 'இஸ்ரேல் ஒழியட்டும்’ என்றும் கோஷமிட்டு வருகிறது," என்று டிரம்ப் கூறினார். ஈரான் அமெரிக்க மக்களை சாலைகளில் குண்டுகளை வைத்து தாக்கிக் கொன்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
அணுசக்தி திட்டங்களை பாதிக்காது:
அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) ஆகிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனம் ஐ.ஆர்.என்.ஏ (IRNA) தெரிவித்தது.
இந்த தாக்குதல்கள் தங்கள் அணுசக்தி திட்டங்களை பாதிக்காது என்று ஈரான் கூறியுள்ளது. மேலும், இந்த தாக்குதல்களை சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்றும், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகவும் கண்டித்துள்ளது.
