அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், ஈரான் இதனை மறுத்துள்ளது. டிரம்பின் அறிவிப்பை இஸ்ரேலும் உறுதிப்படுத்தவில்லை. போர் நிறுத்தம் குறித்த குழப்பம் நீடிக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், ஈராக் இந்த அறிவிப்பை மறுத்துள்ளது. போர் நிறுத்தத்திற்கான எந்தவொரு முன்மொழிவையும் அமெரிக்காவிடம் இருந்து பெறவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இஸ்ரேல் இந்த போர் நிறுத்தம் குறித்த எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

சமூக வலைதளமான எக்ஸில் பதிவிட்ட ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, "தற்போது எந்தவிதமான போர் நிறுத்த ஒப்பந்தமோ அல்லது ராணுவ நடவடிக்கை நிறுத்தமோ இல்லை. இருப்பினும், டெஹ்ரானில் அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தினால், அதற்குப் பிறகு எங்களது பதிலடியைத் தொடர நாங்கள் விரும்பவில்லை. எங்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

பல்டி அடித்த அராக்சி:

இந்த ட்வீட்டை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, டெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக ஒரு அறிக்கையைப் பகிர்ந்தார்.

"இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக எங்கள் சக்திவாய்ந்த ஆயுதப் படைகளின் ராணுவ நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை, அதாவது அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன. எங்கள் அன்புக்குரிய நாட்டை கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை பாதுகாக்கத் தயாராக இருக்கும் எங்கள் துணிச்சலான ஆயுதப் படைகளுக்கு அனைத்து ஈரானியர்களுடன் நானும் நன்றி கூறுகிறேன். எதிரியின் எந்த தாக்குதலுக்கும் கடைசி நிமிடம் வரை பதிலளித்தோம்" என்று அராக்சி தனது பதிவில் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மவுனம்:

இஸ்ரேலிய அதிகாரிகள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படுவதாகக் கூறியிருந்தாலும், அந்நாட்டிடம் இருந்து அதிகாரபூர்வமான கருத்து இன்னும் வெளியாகவில்லை. ஹீப்ரு ஊடகங்களின்படி, இஸ்ரேலிய அதிகாரிகள், ஈரான் தனது ஏவுகணை தாக்குதல்களை நிறுத்த உறுதியளித்தால் பிரதமர் நெதன்யாகு, டிரம்பின் போர் நிறுத்த திட்டத்திற்கு உடன்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அசோசியேட்டட் பிரஸ் (AP) அறிக்கையின்படி, இஸ்ரேலிய ராணுவம் டிரம்பின் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. மேலும் இஸ்ரேல் பிரதமரின் அலுவலகமும் டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு பற்றி இன்னும் பதிலளிக்கவில்லை.

ட்ரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு:

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் தாக்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்தப் போர் நிறுத்தம் 24 மணிநேரத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

“அனைவருக்கும் வாழ்த்துகள்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்தம் (சுமார் 6 மணிநேரத்தில், இஸ்ரேல் மற்றும் ஈரான் தங்கள் தற்போதைய, இறுதி பணிகளை முடித்தவுடன்!) 12 மணிநேரத்திற்குள் அமல்படுத்தப்படும். அதன்பிறகு போர் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படும்!” என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். "24வது மணிநேரத்தில், 12 நாள் போரின் அதிகாரபூர்வ முடிவு உலகால் கொண்டாடப்படும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் உள்ள அல்-உடைத் விமான தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் யாரும் காயமடையவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்பும் கத்தார் அதிகாரிகளும் இதனை உறுதிசெய்துள்ளனர்.