இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தாலும், ஈரான் இதனை மறுத்துள்ளது. 

Iran rejects Trump ceasefire announcement : இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் ராணுவ இலக்குகளை குறிவைத்து "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் தாக்குதல்களை தொடங்கியது, இதன் நோக்கம் ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடுப்பது என அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியது, இதில் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்கள் தாக்கப்பட்டன. இதனால் இரு தரப்பிலும் தினந்தோறும் மோதல் அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கா திடீரென இஸ்ரேலுக்கு ஆதரவாக களம் இறங்கியது. ஈரானில் உள்ள 3 அனுஉலைகளை தாக்கி அழித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

12 நாட்களாக நடந்து வரும் சண்டை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். டிரம்பின் இந்தக் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது. போர் நிறுத்தம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே ஈரான் தனது பதிலடியை நிறுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் பதிலடி கொடுக்க மாட்டோம்: ஈரான்

ஈரான் வெளியுறவு அமைச்சர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரான் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியது போல, இஸ்ரேல் ஈரான் மீது போரைத் தொடங்கியது, ஈரான் அல்ல. இதுவரை, எந்தவொரு போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த எந்த "ஒப்பந்தமும்" இல்லையென தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அரசு ஈரான் மக்களுக்கு எதிரான தனது சட்டவிரோத தாக்குதலைத் நிறுத்த வேண்டும். அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை என கூறினார். எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பாக அப்பாஸ் அராக்சி மேலும் கூறியதாவது: "இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதற்காக எங்கள் சக்திவாய்ந்த இராணுவப் படைகளின் இராணுவ நடவடிக்கைகள் காலை 4 மணி வரை தொடர்ந்தன. நாட்டைப் பாதுகாக்கத் தங்கள் இரத்தத்தின் கடைசி துளி வரை தயாராக இருக்கும், எதிரியின் எந்தவொரு தாக்குதலுக்கும் கடைசி நிமிடம் வரை பதிலடி கொடுத்த நமது துணிச்சலான இராணுவப் படைகளுக்கு நான் அனைத்து ஈரானியர்களுடனும் சேர்ந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம்: டொனால்ட் டிரம்ப்

முன்னதாக, இஸ்ரேலும் ஈரானும் "முழுமையான போர் நிறுத்தத்திற்கு" ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இரு நாடுகளும் தங்கள் "இறுதிப் பணியை" முடித்த ஆறு மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.