ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து, ஈரான் அமெரிக்க விமான படைத்தளத்தைத் தாக்கியது.
கடந்த ஜூன் 13ம் தேதி முதல் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சமடைந்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் இறங்கி கடந்த 22ம் தேதி நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஈரானின் அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசி தாக்கியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தனர்.
இஸ்ரேல் - ஈரான் போர்
இதற்கு அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது. இதற்கு பதிலடியாக நேற்றிரவு ஈரான் ஏவுகணைகளால் கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க விமான படைத்தளத்தை தாக்கியது. அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பை அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
போர் நிறுத்தம் அறிவிப்பு
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில்: அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு முழுமையாக ஒப்புக்கொண்டன. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் சுமார் 6 மணி நேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தை ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை தொடங்கும். அடுத்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ஈரான் இடையே 12 நாட்கள் நடைபெற்ற போரின் முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்த போர் பல ஆண்டுகளாக நடந்து மத்திய கிழக்கையே அழித்திருக்க வேண்டிய ஒரு போராக மாறி இருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதுபோல நடக்காது. இஸ்ரேல் ஈரானை கடவுள் ஆசிர்வதிப்பார். மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவையும் கடவுள் ஆசிர்வதிப்பார் உலகை கடவுள் ஆசிர்வதிப்பார் எனக் கூறியிருக்கிறார்.
ஈரான் மறுப்பு
இந்நிலையில் இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை. போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்த நிலையில் ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிகாலை 4 மணிக்குள் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் ஈரான் தாக்குதல் நடத்தாது. இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
கத்தார் வான்பாதை திறப்பு
இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் நடத்திய 'பஷாரத் அல் ஃபத்தே' தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்டிருந்த வான்பாதையை கத்தார் திறந்துள்ளது. விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் கத்தார் தெரிவித்துள்ளது. கத்தார் ஏர்வேஸ் உட்பட அனைத்து விமான சேவைகளும் வழக்கம் போல் இயங்குகின்றன. குவைத் உட்பட பிற வளைகுடா நாடுகளிலும் வான்பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் தாக்குதல்
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்த சில நிமிடங்களிலேயே, இஸ்ரேல் இராணுவம் ஈரானில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
