Iran launches missile attacks in Qatar : கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து தற்போது ஈரான் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில், தோஹாவில் வெடிச்சத்தம் கேட்டுள்ளது

Iran launches missile attacks in Qatar : கடந்த சில வாரங்களாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. கத்தார் நாட்டில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்க தளமான அல் உடைத் விமானப்படை தளம் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 10 ஆயிரம் வீரர்கள் இருக்கின்றனர். இந்த தளத்தை தான் இப்போது ஈரான் குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக மேற்கத்திய தூதர் கூறியிருக்கிறார்.

மிகப்பெரிய விமானப்படை தளமாக அமெரிக்காவின் அல் உடைத் விமானபடை தளம் உள்ளது. இதில், எகிப்து முதல் கஜகஸ்தான் வரையில் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை குறி வைத்து இப்போது ஈரான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக தோஹாவில் பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டுள்ளது.

ஈராக் விமானப்படைத் தளத்திலும் தாக்குதல்

கத்தார் மட்டுமல்ல, ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் ஐன் அல்-அசாத் விமானப்படைத் தளத்தில் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, முடிந்தவரை பதுங்கு குழிகளிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈராக்கின் மேற்கு அன்பார் மாகாணத்தில் உள்ள ஐன் அல் அசாத் விமானப்படைத் தளத்தில் பதுங்கு குழியில் தஞ்சம் அடையுமாறு வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, அமெரிக்கா ஈராக்கியப் பாதுகாப்புப் படைகளை ஆதரிக்கிறது. அங்கிருந்து நேட்டோ நடவடிக்கைக்கு பங்களிக்கிறது.

ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக 2020இல் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் இந்தத் தளத்தை குறிவைத்தன. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரண்டின் அரிய நட்பு நாடான ஈராக்கில் 2,500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். ஈரான் பாதுகாப்புப் படைகளால் ஆதரிக்கப்படும் போராளிகளுக்கும் இது தளமாக உள்ளது. அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்த பிறகு, இது அதிகரித்து வரும் பதிலடித் தாக்குதல்களைக் கண்டுள்ளது.