கனடாவில் உள்ள பீட்டர்பரோ அருகே இந்திய தம்பதியினர் இனவெறி தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் குழுவொன்று தம்பதியினரை இனவெறி வார்த்தைகளால் திட்டி மிரட்டியது, இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கனடாவில் உள்ள பீட்டர்பரோ அருகே உள்ள லான்ஸ்டவுன் பிளேஸ் மால் பார்க்கிங் பகுதியில் இந்திய தம்பதியினர் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகினர். இந்தச் சம்பவத்தின் காணொளிகளை பாதிக்கப்பட்ட இந்தியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

சம்பவத்தன்று, இந்திய தம்பதியினர் தங்கள் காரில் புறப்பட முயன்றபோது, மூன்று கனடா இளைஞர்கள் கொண்ட ஒரு குழுவினர் தங்களது பிக்கப் ட்ரக்கை இந்திய தம்பதியரின் காருக்கு குறுக்கே நிறுத்தி அவர்களைச் செல்லவிடாமல் தடுத்தனர். பின்னர், அந்த இளைஞர்கள் இந்திய தம்பதியினரை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

அப்போது, அந்த இந்தியர் அந்த ட்ரக்கின் பதிவு எண்ணை வீடியோவில் பதிவு செய்ய முயன்றபோது, இளைஞர்களில் ஒருவர், "காரில் இருந்து வெளியே வருகிறாயா? உன்னைக் கொன்று விடுகிறேன், பார்க்கிறாயா?" என்று மிரட்டல் விடுத்தார். மேலும், அந்த இளைஞர்கள் அநாகரிகமான சைகைகளையும், இனவெறி சார்ந்த வார்த்தைகளையும் பயன்படுத்தி இந்திய தம்பதியினரை அவமானப்படுத்தினர். இளைஞர்களில் ஒருவர், அந்த இந்தியரை நோக்கி, "நீ ஒரு வந்தேறி" என்று கத்தியுள்ளார்.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இளைஞர்களின் இந்தச் செயலுக்குப் பரவலாக கண்டனங்கள் எழுந்தன. பலர் அவர்களின் நடத்தையை மிகவும் அவமானகரமானது மற்றும் கொடூரமானது என்று கண்டித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இந்தியர், இந்தச் சம்பவம் தனக்கும் தனது துணைவருக்கும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய சம்பவங்கள் இனி யாருக்கும் நிகழாமல் இருக்க தனக்கு நீதி வேண்டும் என்றும் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Scroll to load tweet…

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிப்பு

சம்பவம் தொடர்பாக, பீட்டர்பரோ காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த ஜூலை 29, 2025 அன்று லான்ஸ்டவுன் பிளேஸ் மால் பார்க்கிங் பகுதியில் நடந்த சம்பவம் குறித்து ஆகஸ்ட் 8 அன்று விசாரணை தொடங்கப்பட்டதாகவும், சமூக வலைதளங்களில் பரவிய காணொளிகளை ஆய்வு செய்ததில், வெறுப்புணர்ச்சி கொண்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது உறுதியானதாகவும் தெரிவித்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கவார்த்தா லேக்ஸ் நகரைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அரசு வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்திய பின்னர், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் அல்லது உடல்ரீதியாக தீங்கு விளைவிப்பதாக மிரட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில், வெறுப்புணர்வு குற்றம் என நேரடியாகப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், வெறுப்புணர்ச்சி சார்ந்த ஒரு காரணி இருப்பதாக காவல்துறை குறிப்பிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர், பிணையில் விடுவிக்கப்பட்டு, செப்டம்பர் 16, 2025 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பீட்டர்பரோ காவல்துறைத் தலைவர் ஸ்டூவர்ட் பெட்ஸ் கூறுகையில், "இந்த வழக்கில் உள்ள காணொளியைப் பார்த்த எவரும், இது போன்ற நடத்தை எங்கள் சமூகத்திலோ அல்லது வேறு எந்த சமூகத்திலோ ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதைப் புரிந்துகொள்வார்கள். இந்தச் சம்பவம் குறித்த தகவல்களை அளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற நடத்தை எங்கள் நகரத்தின் தரமான நடத்தையல்ல. எங்கள் சமூகத்தில் நிகழும் வெறுப்புணர்ச்சி சார்ந்த சம்பவங்கள்/குற்றங்கள் குறித்து தொடர்ந்து புகாரளிக்க மக்களை ஊக்குவிக்கிறோம். இது போன்ற சம்பவங்களை காவல்துறைக்குத் தெரிவிப்பது, விசாரிக்கவும் தேவைப்படும்போது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவும் தேவையான தகவல்களைப் பெறுவதற்கு மிகவும் முக்கியமானது. இங்கு வாழும், பணிபுரியும் அல்லது வருகை தரும் அனைவருக்கும் நமது சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் உறுதியளிக்கிறோம்," என்றார்.