பிரேசிலின் சான்டா கேட்டரினாவில் வெப்பக் காற்று நிரம்பிய பலூன் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 21 பயணிகளுடன் சென்ற பலூன் தீப்பிடித்து விழுந்ததில் 13 பேர் உயிர் தப்பினர்.
பிரேசிலின் தெற்கு சான்டா கேட்டரினா மாகாணத்தில் சனிக்கிழமை அன்று 21 பயணிகளுடன் சென்ற வெப்பக் காற்று நிரம்பிய பலூன் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர். 13 பேர் உயிர் தப்பினர் என்று உள்ளூர் மற்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில தீயணைப்புத் துறையின் தகவல்படி, இந்த சுற்றுலா பலூன் அதிகாலை நேரத்தில் பறக்கும் போது தீப்பிடித்து, பிரையா கிராண்டே நகரில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் எட்டு பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு குழுவினர் மற்றவர்களை தேடி வருகின்றனர் என்று உள்ளூர் ஆளுநர் ஜோர்ஜின்ஹோ மெல்லோ தெரிவித்தார்.
"இந்த விபத்தால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளோம்," என்று ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
தீப்பிடித்த பலூன் - வைரல் வீடியோ:
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வெப்பக் காற்று நிரம்பிய பலூன் வானத்தில் திடீரெனத் தீப்பிடித்து எரிவதையும் பின் பலூனில் காற்று குறைந்து மெதுவாக தரையில் விழுவதையும் வீடியோவில் காணமுடிகிறது.
உயிர் பிழைத்த பதிமூன்று பேரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
பிரையா கிராண்டே, வெப்பக் காற்று நிரம்பிய பலூன்களுக்கு ஒரு பிரபலமான இடமாகும். ஜூன் மாதத்தில் கொண்டாடப்படும் புனித ஜான் போன்ற கத்தோலிக்க புனிதர்களை கொண்டாடும் திருவிழாக்களின் போது, பிரேசிலின் தெற்கு பகுதிகளில் இதுபோன்ற பலூன் சவாரி பிரபலமாக உள்ளது.
