திருப்பதி விமான நிலையம் விரைவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

உலக புகழ்பெற்ற திருப்பதி கோவில்

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பார்கள் அதற்கு ஏற்றார் போல உலக புகழ்பெற்ற இக்கோவிலில் தினமும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து ஏழுமலையான் அருளை பெறுகின்றனர். பக்தர்கள் வந்து செல்வதற்காக ரயில்கள், சிறப்பு பேருந்துகள், விமானங்கள் இயக்கப்படுகின்றன. திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பசியை போக்கும் வகையில் இலவசமாக அன்னதானம் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை கூடி வரும் நிலையில் மாதம் மாதம் உண்டியல் காணிக்கை 100 கோடி ரூபாயை தாண்டுகிறது. கோவிலுக்கு வரும் தங்குதற்காக இலவச அறைகளும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. 

ரேணிகுண்டா விமான நிலையம்

இந்நிலையில் திருப்பதி விமான நிலையம் (Tirupati Airport) ரேணிகுண்டா விமான நிலையம் (Renigunta Airport) என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமான நிலையம் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பதியில் இருந்து 14 கிலோ மீட்டர்கள் தொலைவிலும், திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலிலிருந்து 39 கி.மீ. தொலைவிலும் உள்ளது. திருப்பதியில் இருந்து டெல்லி, ஐதராபாத், மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ரேணிகுண்டா விமான நிலையத்தின் பெயர் விரைவில் மாற்றப்பட உள்ளது.

அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு

இந்நிலையில் சமீபத்தில் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் திருப்பதி விமான நிலையத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வ தேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி மத்திய விமானத்துறைக்கு பரிந்துரை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

100 எலக்ட்ரிக் பேருந்துகள்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 100 எலக்ட்ரிக் பேருந்துகள் வழங்குவதாக மத்திய அமைச்சரான குமாரசாமி உறுதி அளித்துள்ளார். அதுவும் விரைவில் நடைமுறைக்கு வரும். விரைவில் திருப்பதியில் தண்ணீர், நெய், மற்றும் உணவு பொருட்களை பரிசோதனை செய்யும் மத்திய அரசின் சிஎஸ்ஐஆர் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்தார். 

பெரிய கோயிலாக கட்டப்படும்

மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா மற்றும் துணை முதல்வர் டி.கே சிவக்குமார் ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது பெங்களூருவில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் விஸ்தரிக்கப்பட்டு பெரிய கோயிலாக கட்டப்படும். CSIR ஆய்வகத்திற்கான நிலத்தை திருப்பதி தேவஸ்தானம் குத்தகைக்கு ஒதுக்கவும், திருப்பதி தேவஸ்தானம் கல்லூரிகளை நவீனமயமாக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.