பிரேசிலில் உள்ள மிருகக்காட்சி சாலையில், தடுப்பைத் தாண்டி சிங்கக் கூண்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் பெண் சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞர், சிங்கம் பிடிப்பவராக வேண்டும் என்ற ஆசையில் இருந்ததாக கூறப்படுகிறது.

பிரேசிலில் மிருகக்காட்சி சாலையில் தடுப்பைத் தாண்டிச் சென்ற இளைஞர் ஒரு பெண் சிங்கத்தால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பிரேசிலின் ஜோனோ பெஸ்ஸோ நகரில் உள்ள பார்க் ஸூபோட்டானியோ அருடா கமரா (Parque Zoobotanio Arruda Camara) மிருகக்காட்சி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அந்த இளைஞர் சிங்கம் பிடிப்பவராக மாற வேண்டும் என்ற ஆசையில் தடையை மீறிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்த இளைஞர்

கெர்சன் டி மெலோ மச்சாடோ (Gerson de Melo Machado) என்ற அந்த இளைஞர், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கக் கூண்டுக்குள் நுழைய, சுமார் 20 அடி உயரச் சுவர் மற்றும் பாதுகாப்புக் கம்பியையும் தாண்டி உள்ளே குதித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட மிருகக்காட்சி சாலைக்கு வந்திருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனதுடன், அதனைத் தங்களது கேமராக்களில் பதிவு செய்தனர்.

இந்தச் சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லியோனா என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப் பெண் சிங்கம், மச்சாடோவைத் தாக்கித் தரையில் இழுத்துச் சென்றுள்ளது. பலத்த காயம் அடைந்த அவரை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Scroll to load tweet…

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்

மச்சாடோவின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவருக்கு ஸ்கிசோஃப்ரினியா என்ற மனநலப் பிரச்சினை இருந்ததாகக் கூறுகின்றனர். அவர் பலமுறை சிகிச்சை மையங்களில் தங்கி மனநல சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் சிங்கங்களுடன் பணிபுரியும் நம்பிக்கையில், ஆப்பிரிக்காவிற்குச் செல்ல வேண்டும் என்பதற்காகச் சட்டவிரோதமாக விமானத்தில் ஏறிச் செல்லவும் முயற்சி செய்துள்ளார்.

மிருகக்காட்சி சாலையின் விளக்கம்

இந்தத் துயரச் சம்பவத்தின் காரணமாக மிருகக்காட்சி சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும், தாக்குதலில் ஈடுபட்ட லியோனா சிங்கத்திடம், எந்த ஆக்ரோஷமான நடத்தையும் காணப்படவில்லை என்றும் ஆரோக்கியமாக இருப்பதாவும் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து சிங்கமும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது எனக் மிருகக்காட்சி சாலையின் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவிக்கப்படுள்ளது.