- Home
- Tamil Nadu News
- முட்டாள் இல்ல பாஸ்... பெண் சிங்கம் பிரேமலதா எம்.எல்.ஏ ஆவார்: விஜயபிரபாகரன் நம்பிக்கை
முட்டாள் இல்ல பாஸ்... பெண் சிங்கம் பிரேமலதா எம்.எல்.ஏ ஆவார்: விஜயபிரபாகரன் நம்பிக்கை
2026 சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் - விஜய் இடையே நீண்டகால நட்பு உள்ளதாகவும், தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

பெண் சிங்கம் பிரேமலதா
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆவார் என்று அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜயபிரபாகரன், "2006-ல் எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் எப்படி ஆண் சிங்கமாக சட்டமன்றத்திற்குச் சென்றாரோ, அதேபோல் 2026-ல் பெண் சிங்கமாக எனது தாய் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. ஆகி சட்டமன்றத்திற்குச் செல்வார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விஜய்யுடன் கூட்டணி
முன்னதாக, சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன், "விஜயகாந்துக்கும் விஜய்க்கும் இடையே நீண்டகாலமாக ஒரு சிறந்த நட்பு உள்ளது. அதைத்தான் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் வெளிப்படுத்தினார். எங்களுக்கு விஜய்யைப் பிடிக்கும், அவர் எங்களுக்கு எதிரி இல்லை. நாங்கள் எப்போதும் மக்களுடன் தான் கூட்டணியில் உள்ளோம்" என்றார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜனவரி 9-ம் தேதி நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
தேமுதிக தொண்டர்கள் முட்டாள்கள் அல்ல
அதே செய்தியாளர் சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அவர் விமர்சித்தார். "சீமான் எதிர்க்கட்சிகளைப் பற்றிப் பேசித்தான் பெரிய ஆளாகியுள்ளார். விஜயகாந்த் ரசிகர்களும், தொண்டர்களும் முட்டாள்கள் அல்ல. தேமுதிக தொண்டர்கள் எப்போதும் கேப்டன் விஜயகாந்த் பின்னால்தான் நிற்பார்கள்" என்று விஜயபிரபாகரன் தெரிவித்தார்.