லாகூரில் வளர்ப்புச் சிங்கம் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளைத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி வீடியோவில் சிங்கம் பெண்ணின் முதுகில் குதித்து அவரைக் கீழே தள்ளுவதையும், பின்னர் குழந்தைகளையும் தாக்குவதையும் காணமுடிகிறது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் பரபரப்பான தெருவில் வளர்ப்புச் சிங்கம் ஒன்று ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளைத் துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சிங்கம் வீட்டின் தடுப்புச்சுவரைத் தாண்டிக் குதித்து, தெருவில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணைத் துரத்துவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. சிங்கம் பெண்ணின் முதுகில் குதித்து அவரைக் கீழே தள்ளுவதையும் வீடியோ காட்சிகளில் காணமுடிகிறது. பின்னர், அந்த சிங்கம் அப்பெண்ணின் குழந்தைகளையும் தாக்கியது. ஐந்து மற்றும் ஏழு வயதான அந்தக் குழந்தைகளுக்கு கைகளிலும் முகத்திலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சிங்கம் தாக்குவதை பார்துத ரசித்த உரிமையாளர்கள்:
தாக்கப்பட்ட மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை. இது தொடர்பாக குழந்தைகளின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சிங்கம் மக்களைத் துரத்தித் தாக்கும்போது அதன் உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தந்தை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மூன்று நபர்களை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிங்கம் பிடிபட்டது; உரிமையாளரும் கைது
"சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிங்கம் மற்றும் அதன் உரிமையாளர்கள் தப்பிச் சென்றனர். ஆனால், 12 மணி நேரத்திற்குள் அவர்கள் கைது செய்யப்பட்டனர்" என்று லாகூர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
11 மாத ஆண் சிங்கம் காவல் துறையினரால் பறிமுதல் பிடிக்கப்பட்டு வனவிலங்கு பூங்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. பூங்கா அதிகாரிகள், சிங்கம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தில், சிங்கம், புலி போன்ற பெரிய காட்டு விலங்குகளை செல்லப் பிராணிகளாக வைத்திருப்பது நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளமது. அவற்றை வளர்ப்பது அதிகாரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
மற்றொரு சம்பவம்:
கடந்த 2024 டிசம்பரில், லாகூரின் மற்றொரு பகுதியில் ஒரு வளர்ப்பு சிங்கம் தப்பித்துச் சென்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தியது. பின்னர் அந்தச் சிங்கம் ஒரு பாதுகாப்பு அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிங்கங்களின் விற்பனை, கொள்முதல், இனப்பெருக்கம் மற்றும் உரிமையைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை மாகாண அரசு நிறைவேற்றியது.
இச்சட்டம், செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள் உரிமம் பெற வேண்டும் என்றும், குடியிருப்புப் பகுதிகளில் இவற்றை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது. இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்வதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும், மேலும் பண்ணைகள் குறைந்தபட்சம் 10 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
