பனையூரில் மாஸ் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதற்கான கட்சியின் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் வகையில், கட்சியின் நிர்வாக வசதிக்காக, 120 கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த ஜனவரி 25ம் தேதி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல் 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் 19 மாவட்டச் செயலாளர்களுக்கும் நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் இன்று மூன்றாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது. இதற்காக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.