ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் தேரே இஷ்க் மெயின் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Tere Ishk Mein Trailer : கிருத்தி சனோன் மற்றும் தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெயின்' திரைப்படம் வருகிற நவம்பர் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இதன் டிரெய்லர் தற்போது வெளியாகி, சில நொடிகளில் இணையத்தில் வைரலானது. தனுஷ் மற்றும் கிருத்தியின் அசத்தலான நடிப்பு மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் மயக்கும் இசையால், இந்த டிரெய்லர் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
டிரெய்லரைப் பகிர்ந்த தயாரிப்பாளர்கள் இன்ஸ்டாகிராமில், #TereIshkMein ஆனந்த் எல் ராயின் பிரம்மாண்டமான உலகின் டிரெய்லர் - நவம்பர் 28, 2025 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் திரையரங்குகளில் வெளியாகிறது" என்று எழுதியுள்ளனர். டிரெய்லரைப் பார்க்கும்போது, முக்தி (கிருத்தி) என்ற இளம் பெண், ஆக்ரோஷமான, முரட்டுத்தனமான, விதிகளை மீறும் சங்கர் (தனுஷ்) மீது காதல் கொள்கிறார். ஆனால், அவர்களது காதல் மலர்வதற்குள் சூழ்நிலைகள் அவர்களைப் பிரிக்கின்றன.

தேரே இஷ்க் மெயின் டிரெய்லர்
காதல் தோல்வியைத் தாங்க முடியாமல், தனுஷின் கதாபாத்திரம் பழிவாங்கும் எண்ணத்துடன், தனது உடைந்த இதயத்திற்காக 'டெல்லி முழுவதையும்' எரிப்பதாக சபதம் ஏற்கிறது. இந்த டிரெய்லரை பார்த்த ரசிகர்கள், இது காதல் கொண்டேன் படம் மாதிரி இருப்பதாகவும், ஒருவேளை இது காதல் கொண்டேன் ரீமேக்கா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குநர் ஆனந்த் எல் ராய், 2013-ல் தனுஷ் நடிப்பில் வெளியான தனது காதல் படமான 'ராஞ்சனா'-வின் 10-வது ஆண்டு விழாவில் இந்தத் படத்தை முதலில் அறிவித்தார். இந்த அறிவிப்புடன் வெளியான டீசரில், குறுகிய சந்துகள் மற்றும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் தனுஷின் தீவிரமான வசனம் இடம்பெற்றிருந்தது. "பிச்சிலி பார் தோ குந்தன் தா, மான் கயா. பர் இஸ் பார் சங்கர் கோ கைசே ரோகோகே?" என்று அவர் கூறுவது, இந்தப் படத்தில் ஒரு புதிய மற்றும் மிகவும் ஆக்ரோஷமான கதாபாத்திரத்தை உணர்த்துகிறது.
தேரே இஷ்க் மெயின் படத்தை குல்ஷன் குமார், டி-சீரிஸ், மற்றும் கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ஆனந்த் எல் ராய், ஹிமான்ஷு ஷர்மா, பூஷன் குமார், மற்றும் கிரிஷன் குமார் ஆகியோர் தயாரிப்பாளர்களாக உள்ளனர். இப்படம் நவம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

