Salaar Teaser : இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா... சலார் டீசர் பார்த்து அப்செட் ஆன பிரபாஸ் ரசிகர்கள்
கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் டீசரை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
கே.ஜி.எப் என்கிற பிரம்மாண்ட படைப்பை கொடுத்த பிரசாந்த் நீல், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் சலார். இதில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். அதேபோல் மலையாள நடிகர் பிருத்விராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
பாகுபலிக்கு பின் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நடிகர் பிரபாஸ், சலார் படத்தை மலைபோல் நம்பி உள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், சலார் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. வழக்கமாக படங்களின் டீசர் என்றால் நள்ளிரவு 12 மணிக்கோ அல்லது காலை, மாலை வேளைகளில் வெளியிடுவார்கள். ஆனால் சலார் படக்குழு வித்தியாசமாக அதிகாலை 5.12 மணிக்கு இந்த டீசரை வெளியிட்டது.
பிரபாஸ் படத்திற்கு அதிகாலை காட்சி பார்க்க செல்வது போல், 5 மணிக்கு கண்விழித்து காத்திருந்து சலார் பட டீசரை பார்த்த ரசிகர்களுக்கு அந்த டீசர் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், கே.ஜி.எப் படத்துக்கு கொடுத்தது போல் வழக்கமான அதே பில்டப்பை தான் சலார் படத்துக்கும் கொடுத்திருக்கிறார் பிரசாந்த் நீல். கே.ஜி.எப்பில் ஒரு கிழவர் தனி அறையில் அமர்ந்து ராக்கி பற்றி சொல்வார். ஆனால் இங்கு நிற்க கூட தெம்பில்லாத ஒரு கிழவர், சலார் பற்றி கொடுக்கும் பில்டப் சுத்தமாக எடுபடவில்லை.
இதையும் படியுங்கள்... 'மாமன்னனுக்காக' வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்! நயன் கணவர் விக்கி புகழாரம்!
வழக்கமாக ஹீரோக்களை சிங்கமாக சித்தரித்து தான் சொல்வார்கள். ஆனால் இங்கோ ஜுராசிக் பார்க்கில் இருக்கும் டைனோசர் என குறிப்பிடுகிறார்கள். இதைப் பார்க்கும் போது இதென்ன புது உருட்டா இருக்கு என்று தான் கேட்கத் தோன்றுகிறது. சரி இவ்ளோ பில்டப் கொடுக்கிறார்களே கடைசியில் ஹீரோவை காட்டுவார்கள் என பார்த்தால், ஏப்ரல் ஃபூல் செய்திருக்கிறார்கள். பிரபாஸில் கையை முறுக்குவதை மட்டும் காட்டிவிட்டு முகத்தை காட்டாமலேயே டீசரை முடித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் சலார் டீசரில் கே.ஜி.எப் வாடை பலமாக வீசுகிறது. கே.ஜி.எப் படத்தின் பலமே மாஸ் தான் அது சலாரின் மிஸ் ஆவது போல் தெரிகிறது. அதுவும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளார்களாம். முதல் பாகத்துக்கு சீஸ் பயர் என பெயரிட்டுள்ளனர். கே.ஜி.எப் செய்த மேஜிக்கை சலார் செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படம் செப்டம்பர் 28-ந் தேதி திரைக்கு வருகிறது.
இதையும் படியுங்கள்... ஹாலிவுட் படமான 'மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்' வெளியாகும் திரையரங்குகளில் 'ஜவான்' ட்ரைலர் வெளியாகிறது!