ஆவடி அருகே பெட்ரோல் பங்கில் பணியாற்றும் மாணவனை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் போலீசாரிடம் அழுதவாறு மன்னிப்புக் கேட்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. 

ஆவடி அருகே பட்டாபிராம் பெட்ரோல் பங்க்கில் அம்பத்தூரில் கல்லூரியில் படிக்கும் மாணவன் பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரி விடுமுறை நாட்களில் பெட்ரோல் பங்க்கில் பணி புரிந்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்னர் இரவு 12 மணி அளவில் ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வரிசையில் நிற்காமல் பணியாளர்களிடம் தங்களுக்கு முதலில் டீசல் போடுமாறு கூறினர். 

ஆனால் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளைஞர் வரிசையில் வருமாறு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு அந்த இளைஞரை கடுமையாக தாக்கினர். பின்பு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில் திருவள்ளூர் அருகே உள்ள செவ்வாப்பேட்டையில் பதுங்கியிருந்த சதீஷ், சாம், அப்புன், கார்த்திக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரித்தபோது, பாலா என்ற ரவுடியை கொல்வதற்காக சதீஷ் உள்ளிட்டோர் சென்றதும், வீட்டில் பாலா இல்லாமல் ஏமாற்றத்துடன் வந்தபோது, ஆத்திரத்தில் மாணவரை வெட்டியதாக போலீசாரிடம் கூறியுள்ளனர். மேலும் தாங்கள் செய்தது தவறு என்றும், தங்களை மன்னித்து விடும் படியும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழுதபடி மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகி உள்ளது.