திருவள்ளூர்

திருவள்ளூரில், இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகள் குடும்பத்தோடு மாயமாகியுள்ளார். இந்தச் சம்பவம் மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள கம்மார்பாளையம் என்னும் கிராமத்தில் வசிப்பவர் பாஸ்கர். இவரது மகன் புதுமை வேந்தன் (27). இவருக்கும் பொன்னேரி, என்.ஜி.ஓ., நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து செங்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 3) காலை இருவருக்கும் திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருமண ஏற்பாடுகள் தொடர்பாக பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டார் சென்றிருந்தனர். அங்கு பெண்ணின் வீடு பூட்டுப் போட்டிருந்தது. எங்காவது வெளியே சென்றிருப்பார்கள் என்று சிறிது நேரம் மாப்பிளை வீட்டார் காத்திருந்தனர்.

பிறகு பெண்ணுக்கு ஃபோன் செய்து பார்த்தனர். ஆனால், அவரது ஃபோன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. பின்னர், பெண்ணின் தந்தை, தாய் இருவருக்கும் ஃபோன் செய்தபோதும் அவர்களின் ஃபோனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. 

சந்தேகமடைந்த மாப்பிளை வீட்டார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். அவர்கள், "இவர்கள் வீட்டை காலி செய்துகொண்டு சென்றுவிட்டனர்" என்று தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.

பின்னர், இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டார் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று மணமகளை குடும்பத்தோடு காணவில்லை என்று நேற்று புகார் கொடுத்தார். புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர். 

மணமகள் குடும்பத்தோடு காணாமல் போன சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.