Meta verification: பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் ப்ளூ டிக்கிற்கு கட்டணம்! மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பு!
ட்விட்டரைப் போல, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களிலும் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் பெறப்படும் என்ற மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தைப் பின்பற்றி மெட்டா நிறுவனமும் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் கட்டணம் பெற்றுக்கொண்டு ப்ளூ டிக்கிற்கு வழங்க உள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வசப்படுத்திய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்துவருகிறார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தியது, கிளை அலுவலகங்களை மூடியது போன்ற நடவடிக்கைகளை எடுத்தார்.
செலவைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதே சமயத்தில் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கவும் யோசனை செய்தார். அதன்படி, ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டுவந்தார்.
இப்போது ட்விட்டரை பின்பற்றி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் கணக்குகளிலும் பணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் முறையை அறிமுகம் இருப்பதாக மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் தனது ட்விட்டர் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
“இந்த வாரம் மெட்டா வெரிஃபைட் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறோம். மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் பணம் செலுத்தி வெரிஃபைடு கணக்குகளாக மாற்றும் வசதி கிடைக்க உள்ளது. இதன் மூலம் எங்கள் சேவையின் நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் அதிகரிக்கும்” எனக் கூறியுள்ளார்.
சாதாரண இணையதளத்திற்கு மாதம் 11.99 டாலரும், iOS தளத்தில் இயங்கும் இணையதளத்திற்கு மாதம் 14.99 டாலரும் கட்டணம் பெறப்படும் எனவும் மார்க் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டும் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் வசதி அறிமுகமாகிறது. விரைவில் மற்ற நாடுகளிலும் இந்த வசதி கிடைக்கத் தொடங்கும்.