OpenAI தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் சாம் ஆல்ட்மேன்: மைக்ரோசாப்ட் உடன் வர்த்தக கூட்டணியா?
சாம் ஆல்ட்மேனை மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கொண்டு வருவதற்கும், புதிய குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கும் ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக OpenAI இன்று அறிவித்துள்ளது.
OpenAI நிறுவனம் தனது எக்ஸ் தள பதிவில், ''சாம் ஆல்ட்மேன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், பிரெட் டெய்லர் தலைவராகவும், லேரி சம்மர்ஸ் மற்றும் ஆடம் டி'ஏஞ்சலோ ஆகியோர் புதிய போர்டின் உறுப்பினர்களாகவும் கொண்டு வருவதற்கு நாங்கள் ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளது. மேலும், ஒப்பந்தத்தின் விவரங்களை கண்டறிய தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விஷயத்தை உறுதி செய்யும் விதமாக, சாம் ஆல்ட்மேன், OpenAI க்கு திரும்புவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். தனது பதிவில், "நான் OpenAI- யை நேசிக்கிறேன். கடந்த சில நாட்களாக நான் செய்த அனைத்தும் இந்த அணியையும், அதன் சேவைகளையும் ஒருங்கிணைத்து வைத்து இருக்கிறது. OpenAI-க்கு திரும்பி மைக்ரோசாப்ட் உடன் வலுவான கூட்டணியை உருவாக்குவதற்கு காத்திருக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
போனா வராத ஆஃபர்.. ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் இப்போ ரூ.9,990க்கு விற்பனை.. எப்படி வாங்குவது?
OpenAI தலைமை நிர்வாக அதிகாரியாக திரும்புவதை சாம் ஆல்ட்மேன் அறிவித்த சில நிமிடங்களில் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாடெல்லா, ''அவர்கள் இருவரும் இந்த விஷயத்தை விவாதித்ததாகவும், OpenAI நிறுவனத்தில் மிகவும் நிலையான, திறமையான நிர்வாகத்தை உருவாக்குவதற்கு இந்த முதல் படி அவசியமானது'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை OpenAI நிறுவனம் சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக பொறுப்பில் இருந்து விலக்கியது. இது டெக் உலகில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர் இந்த நிறுவனத்தின் நிறுவனராகவும் இருந்தார். இவரைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த வந்த போர்டு உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இன்னும் பலரும் தங்களது எதிர்ப்பை நிறுவனத்துக்கு தெரிவித்து, ராஜினாமா செய்வதாக எச்சரித்து இருந்தனர். இந்த நிலையில்தான், மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாடெல்லா தங்களது நிறுவனத்துக்கு சாம் ஆல்ட்மேன் வரலாம் என்று அழைப்பு விடுத்து இருந்தார். அவருடன் ராஜினாமா செய்பவர்களும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியில் சேரலாம என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் மீண்டும் OpenAI சாம் ஆல்ட்மேனுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது.
ஆல்ட்மேன் கடந்த ஆண்டு ChatGPT ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் புகழ் பெற்றார். இது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவில் ஆராய்ச்சியை தூண்டி மேம்படுத்துவதற்கான உத்வேகத்தைக் கொடுத்தது. இதையடுத்து, இந்த துறையில் பில்லியன்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் கூகுளுக்கு தலைவலி கொடுக்கும் பிக்சல் 8! டிஸ்பிளேயில் குறை சொல்லும் பயனர்கள்!