Voicemail Scam RBI பெயரில் வரும் போலி வாய்ஸ் மெசேஜ் குறித்து PIB எச்சரிக்கை! வங்கி மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி? புகார் அளிப்பது எங்கே? முழு விவரம் உள்ளே.
இந்தியாவில் தற்போது புதுவிதமான வங்கி மோசடி ஒன்று தலைதூக்கியுள்ளது. மோசடி மன்னர்கள் (Fraudsters) இம்முறை ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியாவின் (RBI) பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு அமைப்பான PIB Fact Check இந்திய பயனர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மோசடி நடப்பது எப்படி?
புது தில்லியில் இருந்து வெளியான தகவலின்படி, பலருக்கும் RBI-லிருந்து பேசுவது போன்ற தானியங்கி குரல் பதிவுகள் (Automated voicemails) வருகின்றன. அதில், "உங்கள் கிரெடிட் கார்டில் மோசடி நடந்துள்ளது, அதனால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட உள்ளது" என்று மிரட்டுகின்றனர். இந்த செய்தியைக் கேட்டு பதற்றமடையும் மக்கள், அவர்கள் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்குகிறார்கள்.
RBI பெயரில் வலம் வரும் பொய்
இது முழுக்க முழுக்க மக்களைப் பதற்றமடையச் செய்து ஏமாற்றும் தந்திரம் ஆகும். "இது ஒரு மோசடி (Scam)" என்று PIB திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஒருபோதும் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்று வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதோ அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு போன் செய்வதோ கிடையாது. இது மக்களை திசைதிருப்பிக் கொள்ளையடிக்கும் முயற்சி என்று PIB விளக்கியுள்ளது.
எப்படி ஏமாறுகிறார்கள்?
மோசடி கும்பல்கள் உண்மையான அரசு அலுவலகம் அல்லது வங்கியில் இருந்து அழைப்பது போலவே தெரியும்படி காலர் ஐடியை மாற்றுகிறார்கள் (Caller ID Spoofing). இதை நம்பி போனை எடுக்கும் மக்களிடம், கணக்கை சரிபார்க்க வேண்டும் என்று கூறி OTP அல்லது வங்கி விவரங்களைக் கேட்கிறார்கள். விவரங்களைக் கொடுத்த சில நிமிடங்களிலேயே கணக்கில் உள்ள பணம் மொத்தமாகச் சுருட்டப்படுகிறது.
தப்பிக்க வழி என்ன?
• நம்பவே வேண்டாம்: வங்கி அல்லது அரசு அமைப்புகள் என்று கூறி வரும் தேவையற்ற அழைப்புகளை நம்பாதீர்கள்.
• விவரங்களை பகிராதீர்கள்: எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் கார்டு எண், PIN அல்லது OTP-யை யாருடனும் பகிர வேண்டாம்.
• நேரடியாக அழைக்கவும்: வங்கி கணக்கு பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால், உடனே உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணிற்கு நீங்களே அழைத்து விசாரிக்கவும்.
• லிங்க் கிளிக் செய்யாதீர்கள்: SMS அல்லது வாய்ஸ் மெசேஜில் வரும் லிங்குகளைத் தொடவே கூடாது.
புகார் அளிக்க வேண்டிய முகவரி
சந்தேகத்திற்கிடமான மெசேஜ் அல்லது அழைப்புகள் வந்தால், அதை உடனே PIB-ன் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். இது மற்றவர்களையும் காப்பாற்ற உதவும்.
• வாட்ஸ்அப்: +91 8799711259
• ஈமெயில்: factcheck@pib.gov.in


