Motorola Edge 70 மோட்டோரோலா எட்ஜ் 70 இந்தியாவில் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது. 50MP கேமரா, மெலிதான டிசைன் எனப் பல சிறப்பம்சங்கள். ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை.

ஸ்மார்ட்போன் சந்தையில் வித்தியாசமான டிசைன்களுக்குப் பெயர் பெற்ற மோட்டோரோலா (Motorola), தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான 'மோட்டோரோலா எட்ஜ் 70' (Motorola Edge 70) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகிவிட்டது. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்தில் அறிமுகமான இந்த போன், சர்வதேச வேரியண்ட்டை விடச் சில கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்தியச் சந்தைக்கு வருகிறது. குறிப்பாக இதன் மெலிதான வடிவமைப்பும், சக்திவாய்ந்த கேமரா அமைப்பும் தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியீட்டுத் தேதி மற்றும் விற்பனை விவரம்

மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த வாரம், அதாவது டிசம்பர் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரபல இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் (Flipkart) மூலமாகவும் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் மூலமாகவும் விற்பனைக்கு வரும். பேன்டோன் பிரான்ஸ் கிரீன் (Pantone Bronze Green), பேன்டோன் லில்லி பேட் (Pantone Lily Pad) மற்றும் கேட்ஜெட் கிரே (Gadget Grey) ஆகிய மூன்று கவர்ச்சிகரமான வண்ணங்களில் இது கிடைக்கும்.

கண்ணை கவரும் டிஸ்பிளே மற்றும் டிசைன்

இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கிய சிறப்பம்சமே அதன் வடிவமைப்புதான். வெறும் 5.99 மிமீ தடிமன் மட்டுமே கொண்ட இது, உலகின் மிக மெலிதான போன்களில் ஒன்றாக இருக்கும். முன்பக்கத்தில் 6.67-இன்ச் pOLED டிஸ்பிளே, 1220 x 2712 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதியுடன் வருகிறது. வெயிலிலும் தெளிவாகத் தெரியும் வகையில் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு இதில் உள்ளது. தண்ணீர் மற்றும் தூசுப்புகாத IP68 மற்றும் IP69 தரச்சான்று பெற்றது கூடுதல் சிறப்பு.

கேமராவில் செய்யப்பட்ட தரமான சம்பவம்

புகைப்பட பிரியர்களுக்காக மோட்டோரோலா இதில் பெரிய விருந்து வைத்துள்ளது. மூன்று முக்கியமான 50MP சென்சார்கள் இதில் இடம்பெற்றுள்ளன:

• 50MP முதன்மை கேமரா (OIS வசதியுடன்).

• 50MP அல்ட்ரா வைட் (Ultra-wide) கேமரா.

• செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்பக்கத்திலும் 50MP கேமரா.

கூடுதலாக, பின்புறம் ஒரு பிரத்யேக 3-இன்-1 லைட் சென்சார் (Light sensor) உள்ளது, இது புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்த உதவும்.

பிராசஸர் மற்றும் செயல்திறன்

செயல்திறனைப் பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 7 Gen 4 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் செய்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.

பேட்டரி மற்றும் சார்ஜிங்

இவ்வளவு மெலிதான போனில் பேட்டரி எப்படி இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். இதில் 4,800mAh திறன் கொண்ட சிலிக்கான்-கார்பன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 29 மணிநேரம் வீடியோ பார்க்கலாம் அல்லது 66 மணிநேரம் பாட்டு கேட்கலாம் என்று நிறுவனம் கூறுகிறது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. வைஃபை, ப்ளூடூத் மற்றும் என்எஃப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டி வசதிகளும் இதில் அடக்கம்.