யாருக்கெல்லாம் 5ஜி வேணும் ஓடியாங்க… அனைவரையும் அழைத்த Jio!
ஜியோ நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜியோ 5ஜி வெல்கம் பேக் வழங்கி வந்த நிலையில், தற்போது அனைத்து பயனர்களும் ஜியோ 5ஜி பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தனது Jio True 5G சேவைகளை பீட்டா முறையில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரணாசி மற்றும் நாத்வாரா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொண்டு வந்தது. அதன்பிறகு பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களிலும் விரிவுபடுத்தியது.
இந்த நகரங்களில் உள்ள ஜியோ பயனர்களை ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை 5ஜி சேவைக்கு வரவேற்கும் வகையில் ஜியோ 5ஜி வெல்கம் பேக் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதி, அவர்கள் பயன்படுத்தும் ரீசார்ஜ் பிளான் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் 5ஜி சேவை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே அனைவருக்கும் 5ஜி சேவை வழங்கும் வகையில் புக் செய்துகொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஜியோ இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் 5ஜி சேவை பெறுவதற்கு ஆர்வம் உள்ளதா என்று கேட்கப்படும். ஆர்வமாய் உள்ளேன் என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண், OTP எண்டர் செய்து புக் செய்துகொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு 5ஜி வந்ததும், உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
இதற்கு முன்பு ஜியோ நிறுவனத்தின் ஃபைபர் வசதிக்கும் இதே போல் எந்தெந்த பகுதிகளில் ஃபைபர் தேவைப்படுகிறது என இணையதளம் வாயிலாக கருத்து கேட்பு பெறப்பட்டது. அதே பாணியில் தற்போது 5ஜி சேவையிலும் கருத்து கேட்கப்படுகிறது.
ஜியோ 5ஜி சேவையைப் பெறுவது எப்படி?
ஜியோ ட்ரூ 5ஜி சேவையைப் பெற வேண்டுமென்றால், 5ஜி ஸ்மார்ட்போன் மட்டும் வைத்திருந்தால் போதாது. உங்கள் ஸ்மார்ட்போனில் ஜியோ நிறுவனத்தின் 5ஜி பேண்ட் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தற்சமயம் ஜியோ நிறுவனம் N28, N77 என்ற பேண்டில் 5ஜி வழங்குகிறது. எனவே, உங்கள் 5ஜி ஸ்மார்ட்போனில் இவ்விரண்டு பேண்ட் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
TRAI அறிக்கை எதிரொலி: Jio 4G ரீசார்ஜ் பிளான்களில் விரைவில் கட்டண உயர்வு?
நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, உங்கள் ஸ்மார்ட்போன் மாடலைப் பார்க்க வேண்டும். அதில், உங்கள் ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பம்சங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளன என்பது பட்டியலிடப்பட்டிருக்கும். அங்கு உங்கள் ஸ்மார்ட்போனில் எந்தவிதமான 5ஜி சிப் உள்ளது, அதில் என்ன பேண்ட் உள்ளது என்பது கொடுக்கப்பட்டிருக்கும். N28, N77 இருந்தால் உங்கள் போனில் ஜியோ 5ஜி கிடைக்கும். ஏர்டெலுக்கு N77 பேண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு 5ஜி பேண்ட் இருக்க வேண்டும், உங்கள் பகுதியில் ஜியோ 5ஜி சேவை அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும், மேலும், குறைந்தபட்சம் ரூ.239 அல்லது அதற்கு மேல் உள்ள கட்டணத்தில் இருக்கும் ரீசார்ஜ் பிளானில் நீங்கள் ஆக்டிவாக இருக்க வேண்டும். இவை மூன்றும் இருந்தால் உங்களுக்கு ஜியோ 5ஜி சேவைக்கான வெல்கம் பேக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ஜியோ இணையதளத்தில் 5ஜி:
ஏற்கெனவே கூறியது போல், https://www.jio.com/ என்ற ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, முகப்பு பக்கத்தில் 5ஜி சேவையில் ஆர்வம் காட்டுகிறேன் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் வெல்கம் பேக் பெறுவதற்கு ஆர்வமாய் உள்ளீர்கள் என்று தெரியப்படுத்தினால், உங்களுக்கு விரைவில் ஜியோ 5ஜி கிடைக்கலாம்.