தொடர் வைப்புநிதி சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 6.7 சதவீதமாக உயர்வு: நிதி அமைச்சகம் அறிவிப்பு
தபால் நிலையங்களில் 5 ஆண்டு தொடர் வைப்புநிதித் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் காலாண்டு தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சகத்தின் புதிய அறிவிப்பின்படி, 5 ஆண்டுகளுக்கான தொடர் வைப்புநிதி திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு வந்த வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சேமிப்பு கணக்குக்கான வட்டி 4 சதவீதமாகவே தொடர்கிறது.
ஓராண்டு வைப்புநிதி திட்டத்துக்கான வட்டிவிகிதமும் 6.9 சதவீதமாக மாற்றமில்லாமல் இருக்கிறது. 2 ஆண்டு, 3 ஆண்டு வைப்புநிதி திட்டங்களுக்கான வட்டிவிகிதம் 7 சதவீதமாக உள்ளது. 5 ஆண்டு வைப்புநிதிக்கு 7.5 சதவீதம் வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது.
வருமான வரி அலெர்ட்.. இந்த நபர்கள் 10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் - முழு விபரம் இதோ!
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் 8.2 சதவீதம் வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. மாதாந்திர வருவாய் கணக்கு திட்டத்தில் 7.4 சதவீதமும், பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் 7.1 சதவீதமும் வட்டிவிகிதம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான கிசான் விகாஸ் பத்திரங்களின் வட்டி 7.5 சதவீதம் ஆகவும், பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்ட கணக்குக்கான வட்டி 8 சதவீதமாகவும் நீடிக்கிறது என மத்திய நிதியமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசு அறிவிக்கிறது. பெரும்பாலான அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமான முதலீட்டு வாய்ப்புகளாக உள்ளன. குறிப்பாக பாதுகாப்பான மற்றும் நிலையான பலன்களை வழங்கும் முதலீட்டை விரும்புகிறவர்களில் முக்கியத் தேர்வாக அஞ்சல் சிறுசேமிப்புத் திட்டங்கள் உள்ளன.
முன்னதாக, ஜூன் மாதத்தில், ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 0.3% வரை உயர்த்தப்பட்டன. குறிப்பிடத்தக்க வகையில், ஐந்தாண்டு தொடர் வைப்புநிதிக்கு அதிகபட்சமாக 0.3 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. வங்கிகளில் நிலையான வைப்புநிதி திட்ட டெபாசிட்களுக்குக் கிடைக்கும் வட்டிவிகிதங்கள் புதிய உச்சத்தைத் தொட்டாலும், பல சிறுசேமிப்புத் திட்டங்கள் இன்னும் நல்ல பலன்களைத் தந்துவருகின்றன.