Instagram AI புகைப்படங்கள் உண்மையானவை போலவே உள்ளதாக இன்ஸ்டாகிராம் தலைவர் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழு விவரங்களை இங்கே காணுங்கள்.

2025-ம் ஆண்டு முடிவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி (Adam Mosseri) சமூக வலைதளங்களில் ஒரு முக்கியமான மற்றும் சற்று அதிர்ச்சியான கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், "செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் புகைப்படத்துறையை மிக வேகமாக மாற்றி வருகிறது. எது உண்மையான புகைப்படம், எது AI மூலம் உருவாக்கப்பட்டது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது," என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நம்பகத்தன்மைக்கு வந்த சோதனை

புத்தாண்டு தொடங்கியதும் மொசெரி எதையும் பூசி மெழுகாமல் உண்மையை உடைத்துப் பேசியுள்ளார். "நம்பகத்தன்மை (Authenticity) என்பது இனி எளிதாக போலியாக உருவாக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது," என்று அவர் கூறியுள்ளார். நாம் பார்க்கும் சாதாரணமான, இயல்பான புகைப்படங்கள் கூட இனி AI மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். இது இன்ஸ்டாகிராம் தளத்திற்கு மட்டுமல்ல, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் அத்தனை பேருக்கும் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

ஏன் கண்களை நம்ப முடியவில்லை?

பொதுவாக கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்கள் பதிவுகள் உண்மையாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, அதிக எடிட்டிங் செய்யப்படாத, சற்று 'கரடுமுரடான' (Unpolished) படங்களைப் பகிர்வது வழக்கம். ஆனால், தற்போது AI தொழில்நுட்பம் அந்தப் பாணியையும் காப்பி அடிக்கக் கற்றுக்கொண்டுவிட்டது. எனவே, ஒரு புகைப்படம் பார்க்க இயல்பாக இருக்கிறது என்பதற்காக அது உண்மையானது என்று நம்பிவிட முடியாது. இனி புகைப்படத்தை விட, அதைப் பதிவிடுபவர் யார் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார் மொசெரி.

கேமரா நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

மொசெரி தனது பதிவில் கேமரா தயாரிப்பு நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை. நவீன கேமராக்களில் உள்ள எக்கச்சக்கமான அம்சங்கள், ஒவ்வொரு புகைப்படத்தையும் பளபளப்பாகவும், செயற்கையாகவும் மாற்றிவிடுவதாக அவர் குற்றம் சாட்டினார். இதற்கு மாற்றாக, எதிர்கால கேமராக்கள் ஒரு புகைப்படம் எடுக்கப்படும்போதே, அது உண்மையானதுதான் என்பதை உறுதிப்படுத்தும் 'கிரிப்டோகிராஃபிக் கையொப்பத்தை' (Cryptographic signature) உருவாக்க வேண்டும் என்ற ஐடியாவையும் அவர் முன்வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமின் அதிரடி நடவடிக்கைகள்

OpenAI-ன் சோரா (Sora) மற்றும் கூகுளின் இமேஜ் ஜெனரேட்டர்கள் மூலம் நாளுக்கு நாள் AI படங்கள் குவிந்து வருகின்றன. இதைச் சமாளிக்க இன்ஸ்டாகிராம் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. AI மூலம் உருவாக்கப்பட்ட படங்களுக்குத் தனி 'லேபிள்' (Label) ஒட்டுவது, உண்மையான கிரியேட்டர்களின் பதிவுகளுக்கு முன்னுரிமை அளிப்பது (Ranking boost), மற்றும் கேமரா நிறுவனங்களுடன் இணைந்து புகைப்படத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது போன்ற பணிகளில் இறங்கியுள்ளது.

இனி தப்பிக்க வழியில்லை

இறுதியாக, இன்ஸ்டாகிராமின் மிக முக்கிய வேலை, பயனர்களுக்கு எது உண்மையானது என்று காட்டிக்கொடுக்கும் 'நம்பகத்தன்மை சமிக்ஞைகளை' (Credibility signals) உருவாக்குவதே என்று மொசெரி கூறியுள்ளார். AI நிறைந்த இந்த புதிய உலகத்திற்கு மாறுவது கடினமாக இருந்தாலும், வேறு வழியில்லை. "இன்ஸ்டாகிராம் பல வழிகளில் மாற வேண்டியுள்ளது, அதை மிக விரைவாகச் செய்தாக வேண்டும்," என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.