சூப்பர் அப்டேட்.. இனி எல்லா ஸ்மார்ட் சாதனங்களிலும் இது கட்டாயம்!
இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள் என எல்லாவற்றுக்கும் சார்ஜிங் போர்ட்டாக USB டைப்-C வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கும் அந்தந்த நிறுவனங்களைப் பொறுத்து அதன் சார்ஜிங் போர்ட் மாறுபடுகிறது. ஆப்பிள் ஐபோனில் லைட்டிங் கேபிளும், சில லேப்டாப்கள் உருளை வடிவ சார்ஜரையும், சிலவற்றில் பட்டை, லைட்டிங் கேபிள், USB B, USB C என பலவாறான சார்ஜிங் போர்ட்டுகளும் உள்ளன. இதனால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதை சரிசெய்யும் வகையில், அனைத்து எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கும் USB C டைப் சார்ஜர் கொண்டு வர வேண்டுமென ஐரோப்பாவில் அமல்படுத்தப்பட்டது. இதேபோல் இந்தியாவிலும் மத்திய அரசு தரப்பில் டைப் சி கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், நேற்று நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) பிரதிநிதிகள், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) பிரதிநிதிகள், IIT-BHU பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதே போல் Samsung, Apple போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் HP, Dell, Lenovo போன்ற ஹார்டுவேர் உற்பத்தியாளர்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்டாக USB Type-C வைப்பது என ஒருமித்த கருத்தாக ஏற்கப்பட்டது. அதன்படி இனி வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்கள் அனைத்தும் சார்ஜ் செய்வதற்கு பொதுவான USB Type-C போர்ட்டுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு டைப் சி போர்ட் கொண்டு வருவதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சமீபத்தில் தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஐரோப்பிய ஒன்றிய (EU) சட்டம் ஐரோப்பாவில் நடைமுறைக்கு வந்த பிறகு, இந்தியாவில் இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Meta இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் தேர்வு! யார் இவர்?
இந்த மாற்றம் முக்கியமாக ஆப்பிள் நிறுவனத்தை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஆப்பிள் நிறுவனமானது ஐபோன், ஐபேட், வாட்ச் போன்ற அதன் தயாரிப்புகளில் அதன் சொந்த லைட்டிங் சார்ஜர் போர்ட்டை வைத்துள்ளது.
யூ.எஸ்.பி டைப்-சியை நிலையான சார்ஜிங் போர்ட்டாக கட்டாயப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றிய சட்டம் வரும் 2024 இல் நடைமுறைக்கு வரும். ஐபோன் 15 சீரிஸ் - 2023 ஆம் ஆண்டின் பிற்பாதியில் அறிமுகமாகும். எனவே, ஐபோன் 15 சீரிஸிலும் லைட்டிங் சார்ஜருக்குப் பதிலாக, டைப் சி சார்ஜர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.