சிப் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட பேக்கேஜிங் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்துகிறார். செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் துறைகளே தற்போதைய பொருளாதாரத்தின் அடித்தளம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் உலகின் பொருளாதாரத்தையே மாற்றி வரும் நிலையில், அதன் அடிப்படையாக இருக்கும் செமிகண்டக்டர் சிப்கள் அடுத்த மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சிக்கு முக்கியமானதாக மாறியுள்ளன. இந்த சூழலில், இந்தியா வெறும் சிப்களை அசெம்பிள் செய்யும் நாடாக இல்லாமல், உலகம் பயன்படுத்தும் சிப்களை வடிவமைக்கும் நாடாகவும் மாற வேண்டும் என்று முன்னாள் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சரும் கேரள பாஜக தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளா்.

தொழில்நுட்பமே பொருளாதாரத்தின் அடித்தளம்

முன்பு தொழில்நுட்பம் பொருளாதார வளர்ச்சிக்கான பல காரணிகளில் ஒன்றாக இருந்தது என்றும் ஆனால் தற்போது தொழில்நுட்பமே பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக மாறிவிட்டதாகவும் தனது கட்டுரையில் ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிடுகிறார். குறிப்பாக AI மற்றும் செமிகண்டக்டர் துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா எடுக்கும் முடிவுகள், இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப பொருளாதாரத்தில் நாட்டின் நிலையை தீர்மானிக்கக்கூடும் என்பது அவரது கருத்து. இந்தியாவிடம் மிகப்பெரிய மக்கள் தொகை, திறமையான மனிதவளம் மற்றும் அறிவுசார் திறன் ஆகிய முக்கியமான பலங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ள அவர், உலகளவில் AI மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் இந்திய பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஏற்கனவே பங்களித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

சிப் துறையில் இந்தியாவின் தற்போதைய பயணம்

இந்திய செமிகண்டக்டர் மிஷன், Design Linked Incentive (DLI), IndiaAI Mission போன்ற திட்டங்கள் இந்தியாவின் சிப் மற்றும் AI சூழலை உருவாக்குவதற்கான தொடக்க நடவடிக்கைகளாக அமைந்துள்ளன. ராஜீவ் சந்திரசேகர் இந்த திட்டங்களை உருவாக்கிய குழுவில் தான் இடம்பெற்றிருந்ததாக கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, Semicon 2.0 திட்டம் ரூ.1.27 லட்சம் கோடி அளவிலான ஒதுக்கீட்டுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. சிப் வடிவமைப்பு, உற்பத்தி, மேம்பட்ட பேக்கேஜிங், ஆராய்ச்சி, உபகரணங்கள் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அசெம்பிளி மட்டும் போதாது

இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் முதலீடுகள் அதிகரித்து வருவது முக்கியமான முன்னேற்றமாக இருந்தாலும், அடுத்த கட்டத்தில் அதிக மதிப்பு கொண்ட தொழில்நுட்பப் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என ராஜீவ் சந்திரசேகர் கூறுகிறார். குறிப்பாக சிப் வடிவமைப்பு, அறிவுசார் சொத்துரிமை (IP), மேம்பட்ட பேக்கேஜிங் மற்றும் செமிகண்டக்டர் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இந்தியா தனது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

Semicon 1.0 கீழ் 12 செமிகண்டக்டர் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலானவை அசெம்பிளி, டெஸ்டிங் மற்றும் பேக்கேஜிங் தொடர்பான திட்டங்களாக இருப்பதாகவும் இதனால் அடுத்த கட்டத்தில் அதிக தொழில்நுட்ப மதிப்பு கொண்ட பகுதிகளுக்கு நகர வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 AI சிப்களில் புதிய வாய்ப்பு

AI துறையின் வளர்ச்சியால் சிப்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக AI மாதிரிகளை உருவாக்குவதற்கான Training மற்றும் அவற்றை பயன்படுத்தி முடிவுகளை உருவாக்குவதற்கான Inference ஆகிய இரு பிரிவுகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன எனவும், Training சிப் சந்தையில் சில பெரிய நிறுவனங்களின் தொழில்நுட்ப சூழல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் AI inference துறையில் கிளவுட், மொபைல் மற்றும் பிற சாதனங்கள், பாதுகாப்பு, வேளாண்மை, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான தனிப்பயன் சிப்களுக்கு வாய்ப்பு இருப்பதாக ராஜீவ் சந்திரசேகர் கூறுகிறார்.

இந்தியாவிடம் சுமார் 1.25 லட்சம் சிப் டிசைன் பொறியாளர்கள் இருப்பதாகவும், இதுபோன்ற மனிதவளம் இந்தியாவுக்கு பெரிய பலமாக அமையக்கூடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். RISC-V அடிப்படையிலான DIR-V போன்ற திட்டங்களும் உள்நாட்டு சிப் வடிவமைப்புக்கு உதவக்கூடும் என்றும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ரூ.1,000 கோடி நிதி வேண்டும்

இந்திய சிப் வடிவமைப்பு நிறுவனங்களுக்கு வெறும் ஆரம்பகட்ட prototype உருவாக்குவதற்கான நிதி மட்டும் போதாது. ஒரு சிப் முழுமையாக வடிவமைக்கப்பட்டு வணிக ரீதியான உற்பத்தி நிலையை அடையும் வரை நிதி ஆதரவு தேவைப்படுவதாக அவர் கூறுகிறார். இதற்காக DLI திட்டத்தை விரிவுபடுத்துவதுடன், சிப் வடிவமைப்பு நிறுவனங்களின் வணிகமயமாக்கலுக்கு உதவும் வகையில் சுமார் ரூ.1,000 கோடி அளவில் Chip Design Commercialisation Fund உருவாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். மேலும், இந்தியாவில் உருவாக்கப்படும் AI inference சிப்களுக்கு அரசு கொள்முதல் மூலம் ஆரம்பகட்ட சந்தையை உருவாக்கும் வகையில் குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்த பெரிய தொழில்நுட்ப வாய்ப்பு

Semicon 2.0 ஏற்கனவே உள்நாட்டு சிப் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியாக செயல்படக்கூடிய இந்திய fabless சிப் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஆதரவும் இதில் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் அடுத்த பெரிய தொழில்நுட்ப வாய்ப்பு வெறும் மின்னணு பொருட்களின் உற்பத்தியில் மட்டுமல்லாமல், அவற்றின் முக்கியமான சிப் மற்றும் சிப் கட்டமைப்பை வடிவமைப்பதிலும் இருக்கலாம்.

உலக நாடுகள் AI மற்றும் செமிகண்டக்டர் துறையில் முதலீடுகளை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிடம் திறமையான மனிதவளம், மிகப்பெரிய உள்நாட்டு சந்தை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழல் ஆகியவை உள்ளன. எனவே, அடுத்த தொழில்நுட்ப வளர்ச்சி அலையில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற வேண்டுமானால், சிப் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் நீண்டகால தேசியத் திட்டம் அவசியம் என்பதே ராஜீவ் சந்திரசேகரின் கட்டுரையின் மையக் கருத்தாகும்.