மீண்டும் ப்ளூ டிக்.. எலான் மஸ்க்கின் அடுத்த கட்ட நடவடிக்கை! டுவிட்டர் நிலைமை?
டுவிட்டர் நிறுவனத்தில் அடுத்தடுத்த பரபரப்பான மாற்றங்கள் நடந்து வரும் நிலையில், எலான் மஸ்க்கின் அடுத்தத் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து தகவல்கள் வந்துள்ளன.
டவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு ஊழியர்கள் நீக்கம், கட்டண சந்தா அமல் என பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கட்டண அடிப்படையில் ப்ளூ டிக் குறியீடு வழங்கும் சந்தா திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால், சில கணக்குகள், பெரிய பெரிய தலைவர்கள், நிறுவனங்களின் பெயரை வைத்து கொண்டு ப்ளூ டிக் பெற்றன.
மேலும், ஒரு சில போலி கணக்குகள், பெரிய நிறுவனங்களின் பெயரில் போலி அறிவிப்புகளை வெளியிட்டன. இதனை நம்பி அந்த நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சியடைந்தது. விளம்பரதாரரர்கள் நழுவினர். டுவிட்டரில் உள்ள கணக்குகளின் உண்மைத் தன்மையை ஆராயமல் ப்ளூ டிக் வழங்கப்பட்டதால் இந்த விபரீதம் ஏற்பட்டது. இதனையடுத்து ப்ளூ டிக் வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார் எலான் மஸ்க்.
இந்த நிலையில், சில முக்கிய அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதன்படி, இனி எச்சரிக்கையுடன், பயனர்களின் கணக்கை ஆராய்ந்த பிறகு ப்ளூ டிக் வழங்கும் வகையில், இத்திட்டத்தை மீண்டும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், டுவிட்ரை சீர்செய்யும் பணி முடியப் போவதாகவும், அது முடிந்தவுடன் டுவிட்டருக்கான தலைமை நியமிக்கப்பட்டு, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், எலான் மஸ்க்கின் தீவிரத்திற்கு அங்கு உள்ள பணியாளர்களால் ஈடுசெய்ய முடியவில்லை. பல பணியாளர்கள் இரவு பகலாக உழைக்கின்றனர். அப்படி இருந்தும் எலான் மஸ்க் எதிர்பார்க்கும் அளவை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் சற்று எரிச்சலடைந்த எலான் மஸ்க், பணியாளர்களுக்கு கெடு விதித்துள்ளார். கடுமையாக பணியாற்றுங்கள், இல்லையெனில் வெளியேறுங்கள் என்பது போல் எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
நீங்க உங்க பாஸ்வேர்டை இப்படியா வச்சுருக்கீங்க... அப்போ உடனே மாத்திருங்க..
டுவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றிய போது டுவிட்டர் சுதந்திரமாக இருக்கும் என்று கூறினார். ஆனால், அதற்கு நேர் மாறாக டுவிட்டர் நிறுவனத்திலேயே ஊழியர்கள் மீது அடக்குமுறையை எலான் மஸ்க் கையாள்கிறார். இது ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் இதை நியாயப்படுத்தும் விதமாக, டுவிட்டரில் ஒருவர் செய்ய வேண்டிய பணியை 8 பேர் சேர்ந்து செய்வதாகவும், அதனால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகவும் கூறுகிறார்.