Twitter Blue Tick வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தம், பணி நீக்கமும் இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பு!
போலி கணக்குகள் எதிரொலியாக Twitter Blue Tick வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப் போகிறது. இந்த ஒரு மாதத்தில் பல மாற்றங்கள் அரங்கேறிவிட்டன. அமைப்புகள் மாற்றம், பணியாளர்கள் நீக்கம், பணிச்சுமை அதிகரிப்பு, வேலை நேரம் மாற்றம், சந்தா கட்டணங்கள் அமல், போலி கணக்குகள் அதிகரிப்பு, பங்குகள் வீழ்ச்சி என எக்கச்சக்க விஷயங்கள் நடந்துவிட்டன.
பணியாளர்கள் கடுமையாக வேலைசெய்ய வேண்டும், இல்லை என்றால் 3 மாதம் சம்பளத்தை வாங்கி விட்டு வெளியேற வேண்டும் என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், இதுதொடர்பாக பணியாளர்களுக்கு மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டுவிட்டர் பணியாளர்கள் மொத்தம் மொத்தமாக ராஜினாமா செய்தனர்.
இது ஒரு புறம் இருக்க, அவசர அவசரமாக கொண்டு வந்த சந்தா கட்டணத்தில் ப்ளூ டிக் வழங்கும் திட்டத்திலும் பிரச்சனை ஏற்பட்டது. பல போலிக் கணக்குகள், பிரபலங்கள், நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி ப்ளூ டிக் வாங்கிவிட்டனர். மேலும், பிரபலங்களின் பெயரில் டுவீட் செய்தமையால், அதை உண்மை என்று நம்பி பெரும் சர்ச்சையானது. டுவிட்டரின் பங்குகள் சற்று சரிந்தன.
போலி கணக்குகள் எதிரொலி! Twitter Blue Tick சந்தா தற்காலிமாக நிறுத்தம்?
இந்த நிலையில், இவ்விரு பிரச்சனைகளையும் சரிசெய்யும் வகையில் எலான் மஸ்க் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, டுவிட்டரில் ப்ளூ டிக் வழங்கும் சேவை நிறுத்தப்படுவதாகவும், மேற்கொண்டு பணி நீக்க நடவடிக்கைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து The Verge செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, டுவிட்டர் இனி எந்த ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யாது என்று எலான் மஸ்க் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதே போல் ப்ளூ டிக் வழங்கும் சேவை நிறுத்தப்படுவதாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், போலி கணக்குகளை கட்டுப்படுத்திய பிறகே ப்ளூ டிக் வழங்கும் சேவை தொடரும் என்றும், அதுவரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தனிநபர் கணக்கில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டும் வகையில், நிறுவனங்களுக்கு வேறொரு நிறத்தில் டிக் குறியீடு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.