4.8 கோடி ரூபாய் செலவில் ‘எலான் மஸ்க் - ராக்கெட்’ சிலை பரிசு!
எலான் மஸ்கிற்கு அவரது உருவத்துடன் கூடிய ராக்கெட் சிலையை பரிசாக வழங்கப்பட உள்ளது. இதன் மதிப்பு இந்திய மதிப்பில் 4.8 கோடி ரூபாய் ஆகும்.
கடந்த ஒரு மாத காலமாக உலகம் முழுவதும் எலான் மஸ்க் பற்றி பேசப்பட்டு வருகிறது. டுவிட்டர் நிறுவனத்தை அவர் கைபற்றிய பிறகு மொத்தமாக பணியாளர்களை பணி நீக்கம் செய்தது, புதிய கட்டண முறை, அனைவருக்கும் ப்ளூ டிக் என பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
எலான் மஸ்க்கின் நடவடிக்கைக்களுக்கு ஒருபுறம் கடும் எதிர்ப்புகள் நிலவினாலும், மறுபுறம் பெரும் ரசிகர்கள் கூட்டமும் இருந்து வருகிறது. சில ரசிகர்கள் எலான் மஸ்க்கை கவுரப்படுத்தும் வகையில் அவரது பெயரையும், உருவத்தையும் தாங்கிய கிராப்ட் பொருட்களை தயாரித்து காட்சிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே எலான் கோட் டோக்கன் என்ற கிரிப்ட்டோ கரன்சி நிறுவனம் எலான் மஸ்கின் அயராத முயற்சிகளைப் பாராட்டி விநோதமான பரிசு அளிக்க முடிவு செய்திருந்தது. அதன்படி, 4.8 கோடி ரூபாய் செலவில் எலான் மஸ்க் ஒரு ராக்கெட்டில் அமர்ந்திருப்பது போலான சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 அடி நீளமுள்ள எலான் மஸ்கின் சிலையை உருவாக்கியுள்ளனர். பின்பு ராக்கெட்டில் சவாரி செய்யும் ஆடு போன்ற தோற்றத்தை வடிவமைத்து, அதன் தலைக்குப் பதிலாக எலான் மஸ்கின் உடலின் மேல் எலான் மஸ்கின் தலை பொருத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 6 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ 4.8 கோடி) என்று தகவல்கள் வந்துள்ளன.
இந்தியாவிற்கு எப்போது Twitter Blue வரும்? Elon Musk பதில்
இந்த சிலையை கனடா நாட்டைச் சேர்ந்த உலோக சிற்பிகளான கெவின் மற்றும் மிச்செல் ஸ்டோன் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. எலோன் GOAT டோக்கன்($EGT) என்ற கிரிப்டோகரன்சி நிறுவனம் இந்த சிலையைக் காட்சிப்படுத்துகிறது. இம்மாத இறுதியில் டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள எலான் மஸ்கின் டெக்ஸான் டெஸ்லா அலுவலகத்திற்கு இந்தச் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, எலான் மஸ்கிற்கு பரிசு அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக கோட் நிறுவனம் கூறுகையில், கிரிப்டோகரன்சிக்கு எலான் மஸ்க் வழங்கிய பல சாதனைகள் மற்றும் அர்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த ராக்கெட் எலான் சிலையை வடிவமைத்துள்ளதாக கூறியுள்ளது