Yuvaraj : ஜி.கே.வாசனுக்கு ஷாக் கொடுத்த யுவராஜ்.! ராஜினாமா கடிதத்தால் பரபரப்பு-திடீர் விலகலுக்கு காரணம் என்ன.?
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியை திடீரென யுவராஜ் ராஜினாமா செய்துள்ள சம்பவம் ஜி.கே.வாசன் உள்ளிட்ட நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.விரைவில் அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுவராஜூம் ஜி.கே.வாசனும்
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்த போது ஜி.கே.வாசனுக்கு வலது கரமாக செயல்பட்டவர் யுவராஜ், காங்கிரஸ் கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தியில் இரண்டாக உடைத்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை ஜி.கே.வாசன் தொடங்கினார். அவர் இந்த கட்சி தொடங்கிய போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஜி.கே.வாசனுடன் சென்றிருந்தனர். அப்போது யுவராஜூக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஜி.கே.வாசனின் தவறான முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறினர்.
ஆனால் ஜி.கே.வாசனின் நம்பிக்கைக்குரியவராக இளைஞர் அணி தலைவர் யுவராஜ் செயல்பட்டு வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி உதவியோடு ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தமாகா- பாஜக கூட்டணி
தனது தோல்வி தொடர்பாக வீடியோ வெளியிட்டவர், பாஜக கூட்டணியோடு இணைந்ததால் சிறுபான்மையினர் தனக்கு வாக்கு அளிக்கவில்லையென கூறியிருந்தார். இதனையடுத்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஜி.கே.வாசன் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். இந்த கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளே நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது யுவராஜ் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதனால் யுவராஜ் எந்த நேரத்திலும் அதிமுகவில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் திடீரென தமாகா இளைஞர் அணி தலைவர் பதவியை யுவராஜ் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஜி.கே.வாசனுக்கு அனுப்பியுள்ளார்.
யுவராஜ் திடீர் ராஜினாமா
அந்த கடிதத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்டமைப்பை சிறப்பாக கட்டமைக்க அயராது பாடுபடுவேன். கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பயணித்து, அயராது உழைப்பேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யுவராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீண்ட காலமாக இளைஞர் அணியில் செயல்பட்டு வருகிறேன். மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் விலகியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் யுவராஜ் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தவறான முடிவால் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் அதிமுகவில் விரைவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.