தலைமைத் தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா ஏன்? தப்பா இருக்கே.. சந்தேகம் எழுப்பும் கிருஷ்ணசாமி.!
கடந்த 75 ஆண்டுக் கால வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக திடீரென்று ராஜினாமா செய்த வரலாறு இல்லை.
மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்தது குறித்து தேர்தல் ஆணையர் அருண் கோயல் மற்றும் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமாக அங்கமாக விளங்குவது நாடாளுமன்றத் தேர்தல் முறையாகும். நாடாளுமன்ற ஜனநாயக தேர்தல் நியாயமாகவும் நாணயமாகவும் பாரபட்சம் இல்லாமல் நடைபெற்றால் மட்டுமே ஜனநாயகம் தளைக்கும். இந்தியத் தேர்தல் ஆணையம் சுயாதீனம் பெற்ற ஒரு தன்னாட்சியமைப்பாகும். அந்த அமைப்பின் நிர்வாகிகளாக இருக்கக்கூடிய தேர்தல் ஆணையர்களுடைய சுதந்திரமான செயல்பாடுகள் 140 கோடி மக்களுடைய ஜனநாயக உரிமைகளைத் தீர்மானிக்கக் கூடியதாகும்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா! மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீர் முடிவு!
இன்னும் சில நாட்களில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வேண்டிய சூழலில், தலைமைத் தேர்தல் ஆணையர் அந்தஸ்தில் உள்ள மூன்று பேர் கொண்ட குழுவில் ஒருவரான அருண் கோயல் அவர்கள் அந்த பொறுப்பிலிருந்து திடீர் என ராஜினாமா செய்துள்ளார்; அதை ஜனாதிபதி அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த 75 ஆண்டுக் கால வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக திடீரென்று ராஜினாமா செய்த வரலாறு இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பில் உள்ள மூன்று பேர் கொண்ட குழுவில் ஏற்கனவே இரண்டு பேர் மட்டுமே இருந்தார்கள். ஒரு இடம் காலியாகவே இருந்தது. தற்பொழுது அருண் கோயல் அவர்களும் ராஜினாமா செய்துள்ளார்; தற்பொழுது ராஜீவ் குமார் மட்டுமே இருக்கிறார்.
28 மாநிலங்களில் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் பல கட்டங்களாகத் தேர்தல் நடத்த வேண்டிய மிகப் பெரிய சவால் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் அருண் கோயல் அவர்கள் ராஜினாமா செய்திருப்பது பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இந்த மிக முக்கியமான காலகட்டத்தில் அவர் ராஜினாமா செய்வதற்கு உண்டான என்ன சூழல் ஏற்பட்டது? என்பதை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அவருடைய ராஜினாமா பல்வேறு விதமான சந்தேகங்களையும் தவறான சமிக்கைகளையும் வெளிப்படுத்துவதைப் போலத் தோன்றுகிறது. மத்திய அரசும் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: எங்க போனாலும் மக்கள் எங்களைத் தான் பாராட்டுராங்க! குஷியாக போட்டோ போட்ட பிரதமர் மோடி!
ஜனநாயகத்தின் ஒரு மிக முக்கியமான அமைப்பில் மிக உயர்ந்த பொறுப்பிலிருந்த அவர் ராஜினாமா செய்ததற்கு உண்டான காரணத்தை நாட்டு மக்களுக்கு விளக்கினால் மட்டுமே அது தேவையற்ற விவாதங்களையும், சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும். வலுவான தேர்தல் ஆணையம் இருந்தால் மட்டுமே நேர்மையான தேர்தல்களை எதிர்பார்க்க முடியும். அதற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய எந்த செயலும் ஏற்புடையதாகாது. எனவே, அருண் கோயல் ராஜினாமா செய்ததற்கான உண்மை காரணங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.