எங்க போனாலும் மக்கள் எங்களைத் தான் பாராட்டுராங்க! குஷியாக போட்டோ போட்ட பிரதமர் மோடி!
பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோயிலில் ருத்ராபிஷேகம்', 'ஜலாபிஷேகம்' மற்றும் துக்தாபிஷேக்' ஆகிய பூஜைகளைச் செய்து பொதுமக்களின் நலனுக்காக பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் 3வது முறையாக வாரணாசி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதிக்குச் சென்றார்.
சனிக்கிழமை வாரணாசி சென்ற பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதற்காக பிரதமர் மோடி மேற்கொண்ட 28 கிலோமீட்டர் சாலைப் பயணத்தில் பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்களும் உள்ளூர் மக்களும் வரிசையாக நின்று, மலர் தூவி உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்ற மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "காசிரங்காவில் இருந்து காசி வரை, அருணாச்சல பிரதேசம் முதல் மேற்கு வங்கம் வரை!" குறிப்பிட்டு தனது இன்றைய பயணம் குறித்துப் பதிவு செய்துள்ளார்.
"காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்து, இந்தியாவின் முன்னேற்றத்திற்காக மகாதேவரின் ஆசீர்வாதத்தைப் பெற்றேன். அமைதியான காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் பசுமையான தேயிலை தோட்டங்களில் இன்றைய நாள் தொடங்கியது. பிறகு அழகிய நகரமான இட்டாநகருக்குச் சென்றேன். அங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும், "ஜோர்ஹாட்டில் லச்சித் போர்புகனின் சிலையை கண்டு மயங்கினேன். அங்கு நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டேன். இதைத் தொடர்ந்து சிலிகுரியில் பல துடிப்பான நிகழ்ச்சிகள் நடந்தன. எல்லா இடங்களிலும், எமது அரசின் பணிகளுக்குக் கிடைத்த மக்களின் பாராட்டுகள் அளப்பரியவை” என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
வாரணாசியில், பாபத்பூரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில், பிரதமரை வரவேற்க, முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விமான நிலையத்தில் இருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் காசி விஸ்வநாதர் கோயில் சென்றார். கோயிலில் 'ருத்ராபிஷேகம்', 'ஜலாபிஷேகம்' மற்றும் துக்தாபிஷேக்' ஆகிய பூஜைகளைச் செய்து பொதுமக்களின் நலனுக்காக பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.
பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் பரேகா ஹெலிபேடில் இருந்து அசம்கருக்குப் புறப்படுவார். பிற்பகல் 2 மணியளவில் திரும்புவார். பின்னர், பாபத்பூர் விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லி புறப்பட்டுச் செல்வார்.