ரேஷன் கார்டு தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் இனி கவலை வேண்டாம்; உடனடியாக புதிய ரேஷன் கார்டை விண்ணபித்து பெற முடியும்

தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 2.07 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் அரிசி ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. மேலும், ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யவும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். புதிய ரேஷன் கார்டுகளுக்கும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாகவே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, ரேஷன் கார்டுகள் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரேஷன் கடைகள் மூலமே தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000க்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இப்படிப்படிப்ப முக்கிய ஆவணமான ரேஷன் கார்டுகளை அனைத்து குடும்பத்திலும் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைப்பர். ஒருவேளை ரேஷன் கார்டு தொலைந்து போனாலும் கவலை வேண்டாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்துக்கு சென்று, உங்களது ஐடி-யை பதிவு செய்ய வேண்டும். அப்போது, உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை பதிவு செய்து TNPDS பக்கத்தினுள் நுழைந்து, அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்து சமர்ப்பித்தால், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.
ஒருவேளை உங்களுக்கு விண்ணப்பிப்பது கடினமாக இருந்தால், அரசின் அனைத்து இ-சேவை மையங்களிலும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுச் சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் தாங்களாகவே விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. ஆனால் இ-சேவை அல்லது பொதுச் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்தால் எவ்வித சிரமும், அலைச்சலும் இல்லாமல் ரேஷன் கார்டுகளை வாங்கலாம்.
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க அரசு இ-சேவை மையங்களில் 60 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதேபோல, தனியார் பொதுச் சேவை மையங்களில் அந்தந்த பகுதிகளுக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 20 நாட்களில் ஒப்புதல் கிடைத்து விடும். விண்ணப்பித்த 2 மாதங்களில் ரேஷன் கார்டு கிடைத்து விடும். தாலுகா அலுவலகத்துக்கு ரேஷன் கார்டு அனுப்பப்படும். அங்கு சென்று சம்பந்தப்பட்ட நபர் ரேஷன் கார்டை வாங்கிக் கொள்ளலாம். அனைத்து தகவல்களும் SMS மூலமாக வாடிக்கையாளரின் மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும்.