பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் பெண் அடிமைத்தனத்தை விரும்புகிறவர்கள்: ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்!
பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் பெண் அடிமைத்தனத்தை விரும்புகிறவர்கள் என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

தமிழக அரசு ஆளுநரை அரசியல் சாசன காவலனாக பார்க்க வேண்டும்; அதே நேரத்தில் தமிழக அரசு அணுகுமுறையை மாற்றி கொள்ளும் போது தானாகவே ஆளுநரின் அணுகுமுறையும் தமிழக மக்களின் நலனுக்காக மாறும் என பழனியில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வருகை தந்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கபட்டது. பின்னர் ரோப்கார் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாயரட்சை பூஜையில் கலந்து கொண்ட அவர், ராஜ அலங்கார முருகனை வழிபட்டார். அதன் பின்னர் போகர் சித்தரை வழிபட்டு விட்டு குடும்பத்துடன் தங்கத்தேர் இழுத்து வழிபட்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த சிபி ராதாகிருஷ்ணன், “இறைவன் ஒருவனே அவரவர் விருப்பபட்டபடி பழனி முருகனாக, காசி விஸ்வநாதனாக, பிள்ளையார்பட்டி விநாயராக, திருப்பதி வெங்கடாசலபதியாக, உருவம் அல்லாத அல்லாவாக, ஏசுவாக வழிபட எல்லோருக்கும் உரிமை உள்ளது. அது தான் உண்மையான மதசார்பற்ற தன்மை. இந்த கடவுள் பெரியது, அந்த கடவுள் பெரியது என்று சொல்வர்கள் மதசார்பின்மையை கடை பிடிக்காதவர்கள்.” என்றார்.
பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் பெண் அடிமைதனத்தை விரும்புகிறவர்கள் என தெரிவித்த அவர், எது சமுதாயத்திற்கு நல்லதோ அதை எல்லோரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், “தமிழக அரசு, ஆளுநரை அரசியல் சாசன காவலனாக பார்க்க வேண்டும். அதே நேரத்தில் தமிழக அரசு அணுகு முறையை மாற்றி கொள்ளும் போது தானாக ஆளுநரின் அணுகுமுறையும் தமிழக மக்களின் நலனுக்காக மாறும். தமிழகத்தின் நலனில் அசைக்க முடியாத ஆர்வமுள்ளவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.” என்றார்.
திருச்சியில் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை!
முன்னதாக, மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை அதிமுக ஆதரிக்காது. இதை கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம். அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேபோல், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.