ஒரு அமைச்சரை தன்னிச்சையாக அமைச்சரவையில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. எனவே ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கான அதிகாரங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
தமிழக ஆளுநராக ஆ.ர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்தே, முதலமைச்சருக்கும் ஆளுநருக்குமான மோதல் தொடர்ந்து வருகிறது. அந்த மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆம். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவிட்டிருந்தார். அவர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதால் அவர் அமைச்சரவையில் தொடர முடியாது என்றும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். மேலும் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால், விசாரணை பாதிக்கப்படும் என்றும் ஆளுநர் கூறியிருந்தார். அவரின் இந்த உத்தரவு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அரசியலிலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ஆளுநரின் உத்தரவுக்கு எதிர்வினையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் இதனை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றும் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் ஒரு அமைச்சரை தன்னிச்சையாக அமைச்சரவையில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. எனவே ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கான அதிகாரங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
முதலமைச்சரின் அதிகாரங்கள் என்னென்ன?
முதலமைச்சர் மற்றும் அவரின் தலைமையிலான அமைச்சரவை மட்டுமே மாநில நிர்வாக அதிகாரங்களை செயல்படுத்துகிறது. ஆளுநரின் பெயரால் முதலமைச்சர் மாநில நிர்வாகத்தை மேற்கொள்கிறார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 164 மாநில அமைச்சர்களின் நியமனம் பற்றி குறிப்பிடுகிறது. அதன்படி சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமிப்பார். முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் மற்ற அமைச்சர்களை நியமிப்பார்.
அரசு அலுவல் விதியின் கீழ், முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர்களின் இலாகாக்களை முதலமைச்சரே மாற்ற முடியும்.
அதே போல், ஒரு அமைச்சரை, இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்கவும் முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது. இலாகா ஒதுக்குவதில் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்க தான் முடியும். நிராகரிக்க முடியாது.
ஒருவேளை முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் 2-வது முறையாக நிராகரிக்கும் பட்சத்தில், மாநில அரசே அரசாணை வெளியிட்டு இலாகாக்களை மாற்றிக் கொள்ளலாம்.
முதலமைச்சர் ஒரு அமைச்சரை எந்த நேரத்திலும் ராஜினாமா செய்ய சொல்லலாம். சட்டப்பேரவையை கலைக்கவும் முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முடியும்.
ஆளுநரின் அதிகாரங்கள் என்னென்ன?
எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத போது, முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுக்கலாம்.
அவசர நிலை பிரகடனத்தின் போது அரசியலமைப்பு சட்ட விதி, 353-ன் படி, குடியரசு தலைவரால் அனுமதிக்கப்படும் போது மட்டுமே ஆளுநர் அமைச்சரவை குழுவின் ஆலோசனையை புறக்கணிக்க முடியும்.
அரசியலமைப்பு சட்ட விதிகள் 160,356, 357-ன் படி, குடியரசு தலைவர் அனுமதித்தால் மட்டும் இன்றி, சிக்கலான சூழ்நிலைகளில் ஆளுநருக்கு எந்த விதமான அதிகாரமும் கிடையாது. அரசியலமைப்பு சட்ட பகுதி 6-ன் படி தேர்ந்தெடுக்கப்பட்டுக்கப்பட்ட அரசாங்கம் பொறுப்பில் போது அமைச்சரவை குழுவின் அறிவுரையின்றி ஆளுநரால் எந்த முடிவும் முடியாது.
அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கான அதிகாரங்கள் கூறப்பட்டிருந்தார். அமைச்சரவை குழுவின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை, அரசியலமைப்பு சட்ட விதி 191-ன் படி, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கும் போது, சட்ட விதி 192-ன் படி ஆளுநர் அவரை தகுதி நீக்கம் செய்யலாம்.
ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகே, எந்த ஒரு மசோதாவும் சட்டமாக முடியும். பண மசோதாவை தவிர, மற்ற மசோதாக்களை சட்டமன்றத்திற்கு ஆளுநர் திருப்பி அனுப்ப முடியும். எனினும் மாநில சட்டமன்றம் மீண்டும் திருப்பி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.
எனவே ஆளுநர் பெயரவிற்கே தலைவராக செயல்படுகிறார். உண்மையான அதிகாரம் முதலமைச்சரிடம், அமைச்சரவை குழுவிடமே உள்ளது.
