கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். கேட் கீப்பரின் அலட்சியம் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Cuddalore train accident : கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே நேற்று ( ஜூலை 8) காலை 7:45 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது, விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வேகமாக சென்ற பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் பள்ளி மாணவர்கள் நிமலேஷ் (வயது 12, ஆறாம் வகுப்பு) சாருமதி (வயது 16, பதினொராம் வகுப்பு) செழியன் (வயது 15, பத்தாம் வகுப்பு) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதில் சாருமதி மற்றும் செழியன் அக்கா, தம்பியாகும்.

ரயில்- பள்ளி வேன் மோதல்

மேலும் வேன் ஓட்டுநர் சங்கர் மற்றும் மாணவர் விஸ்வேஷ் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக உள்ளூர் மக்கள் மற்றும் முதற்கட்ட விசாரணையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியம் விபத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்கஜ் சர்மா ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடவில்லை என்றும், தூங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ரயில் கேட்டை மூடாததால் விபத்து ஏற்பட்டதாகவும், சிக்னல் எதுவும் இல்லை என்றும் வேன் ஓட்டுநர் மற்றும் காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் தெரிவித்தனர்.

ரயில் - பள்ளி வேன் விபத்திற்கு காரணம் என்ன.?

இதனையடுத்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரயில்வே துறையால் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே தற்போது விபத்து ஏற்பட்ட ரயில்வே கேட் 'நான்-இன்டர்லாக்கிங்' வகையைச் சேர்ந்தது எனவும், இதனால் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படுவது தொடர்பாக தொலைபேசி மூலம் தகவல் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும், அந்த வகையில் அன்றைய தினம் அருகில் உள்ள ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் பங்கஜ் சர்மாவிற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க முயற்சித்துள்ளார். ஆனால் பங்கஜ் சர்மா தொலைபேசியை எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதே போல பலமுறை கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடாமல் விட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போனை எடுக்காத கேட் கீப்பர்

இதினடையே கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக ரயில்வே துறை சார்பில் விசாரணை நடத்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 13 பேரிடம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, வேன் டிரைவர் சங்கர் உட்பட 13 பேர் ஆஜராக ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளது. இதே போல மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் இயக்கிய லோகோ பைலட் சக்தி குமார் , உதவி லோகோ பைலட் ரஞ்சித் மீனா ஆகியோருக்கும் சம்மன் விடுக்கப்பட்டுள்ளது . ரயில் வரும்போது சம்பந்தப்பட்ட லெவல் கிராஸ்ங்கில் ஒலி எழுப்பவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இருவருக்கும் சமன் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.