பாமகவின் கூட்டணி மாற்றங்கள் குறித்தும், அன்புமணியின் பாஜக கூட்டணி முடிவு குறித்தும், ராமதாஸின் விமர்சனம் குறித்தும் இந்த பதிவு விளக்குகிறது.
பாஜகவுடன் அன்புமணி கூட்டணி அமைக்க காரணம் என்ன.? தமிழக அரசியல் களத்தில் முக்கிய கட்சியாக திகழ்வது பாமக, வட மாவட்டங்களில் அதிக செல்வாக்கு உள்ள கட்சியாகும், ஒவ்வொரு தேர்தலின் போதும் பாமக தனது கூட்டணி நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் திமுகவுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும் கூட்டணியை உருவாக்கும், மற்றொரு சமயம் பாஜக, தனித்து போட்டி என தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே வரும். அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. அப்போது பாமகவிற்கு 5 இடங்களில் வெற்றி பெற்றது.
பாமகவை கூட்டணிக்கு இழுக்க அதிமுக, பாஜக போட்டி
அடுத்ததாக 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து. ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்த பாமக, பெரும்பான்மையான இடங்களில் டெபாசிட் இழந்தது. முன்னதாக இந்த தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் அணியில் இணைந்து போட்டியிட பாமகவிற்கு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் பாமக அதிமுக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவோடு இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. பாமக நிறுவனரான ராமதாஸ் அதிமுகவுடன் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அன்புமணி பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.
இதன் காரணமாக அன்புமணி, ராமதாஸ் இடையே தொடங்கிய மோதல் தற்போது பூதாகரமாக உருவாகியுள்ளது. புதுச்சேரி பொதுக்குழுவில் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது பாமகவினரை அதிர்ச்சி அடைய செய்தது. அடுத்ததாக அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு அரசியல் களத்தில் பரபரப்ஐ ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அன்புமணியை கடுமையாக விமர்சித்து ராமதாஸ் கொடுத்த பேட்டி இன்னமும் அரசியல் களத்தை சூட்டை உண்டாக்கியுள்ளது. அந்த வகையில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம், அதிமுகவுடன் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டேன். 2024 தேர்தலில் அதிமுக கூட்டணி வேண்டும் என்று விரும்பினேன். அன்புமணியும், எடப்பாடி பழனிசாமி இடம் பேசி கூட்டணியை உறுதி செய்திருந்தார்.
அன்புமணி முடிவிற்கு ராமதாஸ் எதிர்ப்பு
ஆனால், அன்புமணி மற்றும் சௌமியா இருவரும் திடீரென தைலாபுரம் வந்து பாஜக கூட்டணி தான் வேண்டும் என்று காலைப் பிடித்து அழுதனர். அதிமுக-பாமக கூட்டணி என்பது இயல்பான கூட்டணி. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்திருந்தால் பாமக 3, அதிமுக 7 இடங்களில் வென்றிருக்கக்கூடும். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி போட வேண்டும் என்று அன்புமணி கூறினார். இதனால் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் பாமக தலைவராக உள்ள அன்புமணி அதிமுகவை உதறவிட்டு பாஜகவுடன் கூட்டணி அமைக்க அடம்பிடித்தது இதற்காகத்தான் என அரசியல் விமர்சிகர்கள் கூறி வருகிறார்கள். அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியின் மனைவி வெற்றி பெற்றிருந்தால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசை, அல்லது தனக்கு மத்திய அமைச்சரவை அல்லது முக்கிய துறைகளில் பொறுப்பு கிடைக்கலாம் என்ற காரணமாக இருக்கலாம் என கூறுகின்றனர்.
பாஜக கூட்டணியில் அன்புமணி
மற்றொரு தரப்போ மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் சலுகை வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காவே அன்புமணி பாஜகவுடன் கூட்டணி செல்ல முடிவு செய்தததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
