Asianet News TamilAsianet News Tamil

தமிழிசையுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: என்ன காரணம்?

உட்கட்சி சலசலப்புகளுக்கு மத்தியில் தமிழிசை சவுந்தரராஜனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

What is the reason behind BJP president Annamalai meets Tamilisai Soundararajan smp
Author
First Published Jun 14, 2024, 4:58 PM IST | Last Updated Jun 14, 2024, 4:58 PM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து, தமிழக பாஜகவுக்குள் சலசலப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தால் தேர்தலில் வெற்றி கிடைத்திருக்கும். கூட்டணி அமையாமல் போக மாநிலத் தலைவர் அண்ணாமலை தான் காரணம் என அதிமுக மூத்த தலைவர்கள் கூற, அதற்கு பாஜகவினர் எதிர்வினையாற்றினர்.

இதுஒருபுறமிருக்க, தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநரும், தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான தமிழிசை சவுந்தராரஜன், சொந்த கட்சியினர் மீதே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். “தமிழக பாஜவில் தற்போது குற்றப் பின்னணி கொண்டவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர். நான் தலைவராக இருந்த போது கட்சியில் சேருவதற்கு சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தேன். இதனால் மிகவும் நேர்மையானவர்களுக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அப்படி இல்லை.” என தமிழிசை தெரிவித்தார்.

மேலும், “தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் பாஜக ஐடி விங் நிர்வாகிகள் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.” எனவும் தமிழிசை எச்சரிக்கை விடுத்தார்.

ஆந்திர அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு: யாருக்கு எந்த துறை - முழு விவரம்!

இதையடுத்து, தமிழிசை, அண்ணாமலை ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இதுகுறித்து பாஜக மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும், அதனை அளிக்க டெல்லி சென்ற அண்ணாமலையை பாஜக மேலிடம் கடுமையாக திட்டி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. கோவை திரும்பிய அண்ணாமலையும், இனி வேறு எங்கும் பேட்டி கொடுக்க மாட்டேன்; கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் பேட்டி கொடுப்பேஎன் என்று அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா மேடையில் அமித் ஷா, தமிழிசையை அழைத்துப் பேசினார். அப்போது, தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை மறுப்பது போல் சைகை காட்டி அமித் ஷா எச்சரிப்பது போன்ற பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்த தமிழிசை, “2024 தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக ஆந்திராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். ​​தேர்தலுக்குப் பிந்தைய நிலைகள், சவால்கள் பற்றி கேட்க அவர் என்னை அழைத்தார். அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அக்கறையுடன் அறிவுறுத்தினார்.” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த பின்னணியில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசையின் வீட்டுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரை சந்தித்து பேசினார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசையை அவர்கள்  இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசையின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது.” என பதிவிட்டுள்ளார்.

 

 

அண்ணாமலையுடனான சந்திப்பு குறித்து தமிழிசை, “தமிழக பாஜக மாநிலத் தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலையை சந்தித்ததில் மகிழ்ச்சி.” என தெரிவித்துள்ளார். அண்ணாமலை, தமிழிசை ஆகிய இருவருக்கும் இடையே மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நடைபெற்றுள்ள இந்த திடீர் சந்திப்பு குறித்து விசாரிக்கையில், தமிழிசையும், அண்ணாமலையும் எதிரும் புதிருமாக இருப்பதாக கட்சிக்குள் தோற்றம் ஏற்பட்டுள்ளது. மோதல் இருந்தாலும் கூட அதனை மறந்து வரும்காலங்களில் இணக்கமாக செயல்பட வேண்டும். இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இணைந்து கலந்து கொள்ள வேண்டும் என பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரிலேயே இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதனைத்தான் பாஜக தலைமை அண்ணாமலையிடமும், அமித்ஷா தமிழிசையிடம் மேடையிலும் தெரிவித்தார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios