ஆந்திர அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு: யாருக்கு எந்த துறை - முழு விவரம்!
ஆந்திர மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. அதனுடன் சேர்த்து சில மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், ஆந்திர மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளாக ஜனசேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று முன் தினம் பதவியேற்றார். விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட விழாவில் அவருடன், கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பொறுப்பேற்றார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பொது நிர்வாகத் துறை, சட்டம்-ஒழுங்கு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
துணை முதல்வர் பவன் கல்யானுக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சுற்றுச்சூழல், வனம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறை ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கு மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை, ஆர்டிஜி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மூத்த தலைவர் கிஞ்சராப்பு அச்சநாயுடு வேளாண்மை, கூட்டுறவு, சந்தைப்படுத்தல், கால்நடை பராமரிப்புத் துறை, பால்வள மேம்பாடு மற்றும் மீன்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கொள்ளு ரவீந்திரனுக்கு சுரங்கம் மற்றும் புவியியல், கலால் துறை, மனோகருக்கு உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், நுகர்வோர் விவகாரங்கள் துறை, பொங்குரு நாராயணாவுக்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூட முயற்சிக்கும் திமுக - அண்ணாமலை கடும் கண்டனம்!
சந்திரபாபு நாயுடு அமைச்சரவையின் இளம் அமைச்சரான வாங்கலபுடி அனிதாவுக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியிலும் பெண்களே உள்துறையை வகித்தனர் என்பது கவனிக்கத்தக்கது. மூத்த தலைவர் பையாவுலா கேசவுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் ஒய்.சத்யகுமாருக்கு சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் மருத்துவக் கல்வி இலாகா வழங்கப்பட்டுள்ளது.
முதல் முறை எம்.எல்.ஏ.வான டிஜி பாரதிற்கு தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகமும், மூத்த தலைவர் ஆனம் ராம்நாராயண ரெட்டிக்கு அறநிலையத்துறை அமைச்சகமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கிஞ்சராப்பு அச்சநாயுடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவராக பல்லா சீனிவாச ராவ் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.