கிருஷ்ணகிரி அருகே திருமண சடங்கின் போது மாப்பிள்ளையின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது விருப்பப்படி, உடலுக்கு முன் தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பெருகோபனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜ் (60). ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி மஞ்சுளா (48). இவர்களின் மூத்த மகன் மனிஷ் (26). இவருக்கும் பர்கூர் பகுதியை சேர்த்த கோவிந்தராஜ் சிவசங்கரி ஆகியோரின் மூத்த மகள் காவிய பிரியா (21) என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
பந்தக்கால் முதல் திருமண நிச்சயதார்த்தம் வரை நடந்து முடிந்துவிட்டது. உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வீட்டுக்கு வந்தனர். இவர்களின் திருமணம் நேற்று திங்கட்கிழமை நடைபெற இருந்த நிலையில் திருமண சம்பிரதாயங்களின் போது மாப்பிள்ளையின் தந்தை வரதராஜ் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையும் படிங்க: சென்னை முதல் வேலூர் வரை இன்று தரமான சம்பவம் இருக்காம்! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்!
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த போது வரதராஜ் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் வரதராஜ் குடும்பத்தினர் மட்டுமின்றி பெண் வீட்டார் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இது ஒருபுறம் இருக்க மணமகனின் தந்தை இறந்து போனதால் ஏற்கனவே திட்டமிட்டவாறு திருமணம் எப்படி நடைபெறும் என்பது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடையே கேள்வி எழுந்தது. அப்போது உயிரிழந்த வரதராஜனின் மனைவி மஞ்சுளா இந்த திருமணம் நடைபெறுவதற்காக தனது கணவர் மிகுந்த ஆசையாக இருந்தார். ஆகையால் திருமணத்தை நிறுத்த வேண்டாம் என்று கூறினார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! மார்ச் 12ம் தேதி விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?
அதன்படி உயிரிழந்த வரதராஜனை குளிப்பாட்டி புதிய வேட்டி சட்டை அணிவித்து அவரது உடல் முன்பாக அவர் கையினால் தாலியை எடுத்து கொடுக்க வைத்து இந்த திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்களும் கண்ணீர் மல்க மணமக்களை வாழ்த்தினர். திருமணம் நடந்து முடிந்த பிறகு வரதராஜின் இறுதிச் சடங்குகள் முடிந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
